கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்
கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்
UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM
ADDED : ஜூலை 11, 2011 11:25 PM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் நடக்கும் குழந்தை திருமணத்தால், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாக, யுனிசெப் ஆய்வில், 'திடுக்' தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட மக்கள் தொகை குறைந்த பகுதியில், பள்ளி சிறுமிகள், கழுத்தில் தாலியுடன், பள்ளிக்கு வரும் அவல நிலை தொடர்கிறது. குழந்தை திருமணத்தை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியவை இணைந்து, குழந்தை நேய கிராம திட்டத்தை துவக்கியது. இதன் மூலம், கிராமங்களில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யுனிசெப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: இந்திய திருமண சட்டப்படி, 18 வயதுக்கு ஒரு நாள் குறைவாக உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தாலும், அது குழந்தை திருமணமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் குழந்தை திருமணம் நடப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிராமங்களில், பெண்களை உடனடியாக திருமணம் செய்து அனுப்ப வேண்டும், என்ற மனோரீதியில் பெற்றோர், குழந்தைகளுக்கு திருமணம் செய்கின்றனர். குழந்தை திருமணத்தால், பெண்களுக்கு, 60 சதவீதம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மகப்பேறு மரணம், குழந்தை பிறப்பில் சிக்கல், குறைபாடு குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை வளர்சியின்மை ஆகியவை ஏற்படுகிறது. குழந்தை திருமணம் குறித்து, 89396 - 97884 என்ற மொபைல்போன் எண்ணில், புகார் தெரிவிக்கலாம்; தகவல் அளிப்பவர்கள் விவரம், ரகசியம் காக்கப்படும். குழந்தை திருமணம் செய்பவர்கள், உடந்தையாக இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க, சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார்.