Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்?

2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்?

2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்?

2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்?

UPDATED : ஜூலை 14, 2011 12:10 AMADDED : ஜூலை 11, 2011 11:21 PM


Google News
Latest Tamil News
மத்திய அமைச்சரவையில், இழந்த இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில், தி.மு.க., ஆர்வம் காட்டாமலிருப்பதால், பதவி தர முடியாது என, காங்கிரஸ் கைவிரித்துவிட்டதா அல்லது கட்சியில் யாருக்குமே தகுதி இல்லை என, தி.மு.க., தலைமை நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2009, மே, 22ம் தேதி அமைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (சீசன் - 2) அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கு மூன்று கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

இதில், அழகிரி, தயாநிதி என, இரண்டு கேபினட் பதவிகள், கட்சித் தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டன. மற்றொரு கேபினட் பதவியும், அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ராஜாவுக்கு கொடுக்கப்பட்டது.

இதர நான்கு இணை அமைச்சர் பதவிகளில், பழனி மாணிக்கம், காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகியோர் அமர வைக்கப்பட்டனர். குடும்பத்தினருக்கு பதவி வழங்குவதற்காகவே, 1996ம் ஆண்டு முதல், மத்திய அமைச்சரவையில், தொடர்ந்து அங்கம் வகித்து வந்த பாலுவுக்கு பதவி மறுக்கப்பட்டது.ஸ்பெக்ட்ரம் வழக்கு, விஸ்வரூபம் எடுத்ததால், கடந்த ஆண்டு, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா விலகினார். ராஜாவுக்குப் பதிலாக, கனிமொழியை மத்திய அமைச்சராக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், ஒரே குடும்பத்தில், மூவருக்கு பதவி வழங்க பிரதமர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கனிமொழிக்கு இல்லை என்றானதும், அந்தப் பதவியை வேறு யாருக்கும் பெற்றுத் தருவதில், தி.மு.க., தலைமையும் அக்கறை காட்டவில்லை.

அதே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஏர்செல் நிறுவன அதிபரை மிரட்டிய தயாநிதியும், தன் மத்திய அமைச்சர் பதவியை இழந்துள்ளார். தற்போது, மத்திய அரசில், தி.மு.க., சார்பில் ஒரே ஒரு கேபினட் அமைச்சராக, அழகிரி மட்டுமே அங்கம் வகிக்கிறார். இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகள் காலியாகவே இருக்கின்றன.

'இந்த இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளை, மத்திய அரசிடம் கேட்டு பெறுவீர்களா?' என, பாலுவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'அப்படி எந்த திட்டமும் எங்களிடம் இல்லை' என, அவர் பதிலளித்தார்.

மத்திய கேபினட் அமைச்சர் பதவிகளை பெறுவதில், தி.மு.க., அக்கறை காட்டாமலிருப்பது, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தி.மு.க.,வின் மத்திய அமைச்சர்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோர் மீது, அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், தி.மு.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவிகளை வழங்க காங்கிரஸ் மறுத்துவிட்டதா அல்லது மத்திய அமைச்சர் பதவிகளை அலங்கரிப்பதற்கு, கருணாநிதி குடும்பத்தில் வேறு யாரும் இல்லாததால், தலைமை அக்கறை காட்டவில்லையா என்ற சந்தேகம், தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தி.மு.க.,வில், டி.கே.எஸ்.இளங்கோவன் (வடசென்னை), ஆதிசங்கர் (கள்ளக்குறிச்சி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை), சுகவனம் (கிருஷ்ணகிரி), தாமரைச் செல்வன் (தர்மபுரி), வேணுகோபால் (திருவண்ணாமலை) உட்பட லோக்சபா எம்.பி.,க்கள், 18 பேரும், ராஜ்யசபாவில், திருச்சி சிவா உள்ளிட்டோரும் எம்.பி.,க்களாக உள்ளனர்.

இவர்களில், ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த ஆதிசங்கர், விஜயன், வேணுகோபால், இளங்கோவன் மற்றும் மூன்றாவது முறை எம்.பி.,யாகியுள்ள திருச்சி சிவா ஆகியோர், மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனாலும், இவர்களை மத்திய அமைச்சராக்குவதில், தலைமைக்கு விருப்பமில்லை என்றே, இவர்களது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தயாநிதியும், அழகிரியும் முதல் முறையாக எம்.பி.,யான போதிலும், அவர்களை கேபினட் பதவியில் அமர்த்தி, இதே தி.மு.க., தலைமை தான் அழகு பார்த்தது.இரண்டு கேபினட் மத்திய அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தும், அவற்றில், மற்ற எம்.பி.,க்களை நியமிப்பதில், தி.மு.க., தலைமை அக்கறை காட்டாததால், எம்.பி.,க்களும், அவர்களது ஆதரவாளர்களும், தலைமை மீது கடும் விரக்தியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us