நீர்ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆய்வு நடத்த மும்முரம்
நீர்ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆய்வு நடத்த மும்முரம்
நீர்ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆய்வு நடத்த மும்முரம்
ADDED : ஜூலை 24, 2011 11:39 PM
தர்மபுரி : தமிழகம் முழுவதும் உள்ள நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்புகளை
அகற்ற, அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகளில்,
பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க.,
ஆட்சியில் நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை
உயர்த்தவும். மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மழைநீர்
சேகரிப்புத் திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக கடைபிடிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, புதிய கட்டடங்கள் கட்டும் போது, மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே வீட்டுமனைக்கான அங்கீகாரம்
கொடுக்கப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த, தி.மு.க., அரசு,
கடந்த ஐந்தாண்டுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை. இதனால், பெயருக்கு மட்டும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்
இருந்தது. தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள், அணைகள் உள்ளிட்ட
பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகள்
ஏற்பட்டுள்ளன. நீர் ஆதார கால்வாய்கள் முதல், நீர்வழிப்பாதைகள் வரை
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால்,
நீர் சேமிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் ஐகோர்ட்
உத்தரவுப்படி, நீர் ஆதாரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும்,
மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதைய அரசு, நீர் ஆதாரங்களில்
உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக
தமிழகம் முழுவதும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள்
மற்றும் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், ஊராட்சி
கட்டுப்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நிலை
குறித்து புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள்
சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கு இது குறித்த
அறிக்கை அனுப்பி, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. நேற்று முன்தினம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பாசன விவசாயிகள்
சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் நீர் ஆதாரங்களில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்து
டி.ஆர்.ஓ., கணேஷ் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நீர்
ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு நிலை குறித்த விவரங்கள், பொதுப்பணித்துறை
மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் ஆதார அமைப்புகளில் உள்ள
ஆக்கிரமிப்பு நிலைகள் குறித்து அறிந்த பின், கோர்ட் வழிகாட்டுதல்படி, நீர்
நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம்
தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கணேஷ் கூறினார். அதே போல்,
சாலையோரங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,
சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.


