பழநி அருகே காட்டுத்தீ: அரிய மரங்கள் அழிப்பு
பழநி அருகே காட்டுத்தீ: அரிய மரங்கள் அழிப்பு
பழநி அருகே காட்டுத்தீ: அரிய மரங்கள் அழிப்பு
ADDED : ஆக 01, 2011 11:02 PM

பழநி: பழநி அருகே குதிரையாறு அணைப்பகுதியில் காட்டுத்தீயால் விலை மதிப்பு மிக்க மரங்கள் அழிந்து வருகின்றன.
இதனால் வன உயிரினங்கள் கிராமங்களில் புகுந்து விடுகின்றன. இம்மலையில் தேக்கு, சந்தனம், யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள்; வனஉயிரினங்கள் உள்ளன. குதிரையாறு அணையின் மேல்பகுதியில், ஒற்றைக்கால் பரதேசையா சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆடி அமாவாசையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு விழா முடிந்து பக்தர்கள் திரும்பிய போது, காட்டில் தீ வைத்தனர். காய்ந்த நிலையில் இருந்த அரிய வகை மரங்கள் எரிந்தன. ரேஞ்சர் தர்மராஜ் தலைமையில் வனத்துறையினர் தீயை அணைத்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து தீ பரவி வருகிறது. இயற்கை ஆர்வலர் ராஜா கூறுகையில், ''சமூக விரோதிகள் சிலர், விறகுகளுக்காக மரங்களுக்கு தீ வைக்கின்றனர். மரங்கள் மட்டுமின்றி வன உயிரினங்களும் அழியும் அபாயம் நீடிக்கிறது. வன விலங்குகள் கிராமங்களுக்குள் வருகின்றன,'' என்றார். ரேஞ்சர் தர்மராஜ் கூறுகையில், ''பழங்குடியினர் உதவியுடன் மரத்துண்டுகளின் மீது, மணல் தூவி அணைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. குறிப்பிடும் வகையில் பாதிப்பு இல்லை,'' என்றார்.