கண்ணீர் சிந்தாத புதிய முதல்வர் சதானந்த கவுடா : இவர், இப்படி...
கண்ணீர் சிந்தாத புதிய முதல்வர் சதானந்த கவுடா : இவர், இப்படி...
கண்ணீர் சிந்தாத புதிய முதல்வர் சதானந்த கவுடா : இவர், இப்படி...

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, சதானந்த கவுடா தற்போது முதல்வராகியிருக்கிறார்.
எடியூரப்பா பதவி விலகியதும், அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதில், கடும் குழப்பம் ஏற்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஆனந்தகுமார், தன்னுடைய ஆதரவாளர் ஜகதீஷ் ஷெட்டரை முதல்வர் பதவிக்குப் பரிந்துரை செய்தார். ஆனால், சதானந்த கவுடாவுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அதிகம் இருந்ததால், அவர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழாவுக்கு, தனது போட்டியாளர் ஜகதீஷ் ஷெட்டரை தனிப்பட்ட முறையில் அழைத்து, உபசரித்தார் சதானந்த கவுடா. இவரது அழைப்பை ஏற்று, முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார் ஷெட்டர். ஆனால், எடியூரப்பாவின் ஆதரவாளர்களான ரெட்டி சகோதரர்கள், இந்த விழாவைப் புறக்கணித்து விட்டனர். இதன் மூலம், கர்நாடக பா.ஜ., கட்சியில் உட்பூசல் நீடிப்பது, தெளிவாகி விட்டது. மறைமுகமாக, அவர்கள் சதானந்த கவுடாவுக்கு குடைச்சல் கொடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், சுலியா தாலுகாவைச் சேர்ந்தவர் சதானந்த கவுடா. வழக்கறிஞர் தொழில் செய்து வந்த கவுடா, அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் தீவிர தொண்டராகி, முழு நேர அரசியல்வாதியாக மாறினார். 2004ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஜனார்த்தன் பூஜாரியை தோற்கடித்து எம்.பி.,யானார். 2007ல், கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க, முக்கியப் பங்கு வகித்தவர் கவுடா. 2009ல் நடந்த தேர்தலில், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கர்நாடகாவின் ஒக்காலிக்கா சமூகத்தைச் சேர்ந்தவர். கல்லூரி நாட்களில், சிறந்த விளையாட்டு வீரராக இருந்தவர். இவருக்கு, ஒரே மகன் உள்ளார். கர்நாடக மாநில பா.ஜ., தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இதுவரை, இவர் மீது எந்தப் புகாரும் வந்ததில்லை. லோக் ஆயுக்தா எடியூரப்பா மீது கூறிய குற்றச்சாட்டு விவகாரத்தில், தன்னுடைய சீனியரை இவர் காப்பாற்றுவாரா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.