Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மண்ணெண்ணெய் சப்ளையை சீராக்க ஆலோசனை

மண்ணெண்ணெய் சப்ளையை சீராக்க ஆலோசனை

மண்ணெண்ணெய் சப்ளையை சீராக்க ஆலோசனை

மண்ணெண்ணெய் சப்ளையை சீராக்க ஆலோசனை

ADDED : ஜூலை 17, 2011 01:18 AM


Google News

திருப்பூர் : மாநில அளவில் மண்ணெண்ணெய் வினியோகத்தை சீரமைப்பது குறித்து வீடியோ 'கான்பரன்சிங்'கில் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் ஆலோசனை நடத்தினர்.

அதிகாரிகளின் நடவடிக்கையால், திருப்பூரில் கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் இதன் வினியோகம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதன் கொள்முதல் விலை அதிகமாக உள்ள நிலையிலும், மத்திய அரசு மானியம் வழங்குவதால், குறைந்த விலைக்கு கொடுக்கப்படுகிறது.ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் பதுக்கல் காரர்கள் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகளால் பல வழிகளில் பெறப்பட்டு, வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் பொறுப்பும், மத்திய அரசின் ஒதுக்கீடு குறைந்துள்ள நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் மாநில அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக, சமையல் காஸ் வீட்டு இணைப்பு பெற்ற விவரங்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யும் பணி, கடந்த மாத இறுதியில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.



இப்பணி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த முதல் தேதி துவங்கியது; தொடர்ந்து நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களிலும் 7.11 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 5.5 லட்சம் வீட்டு காஸ் இணைப்புகள் உள்ளன. காஸ் இணைப்பு விவரங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப் பட்ட போது, பெருமளவு காஸ் இணைப்பு பெற்றவர்கள் ரேஷனில் மண்ணெண்ணெய் பெறுவது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதத்துக்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான போலி ரேஷன் கார்டுகளும் கண்டறியப்பட்டன. அவ்வகையில், 36,000 லிட்டர் மண்ணெண்ணெய் மீதமாகியுள்ளது. மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பாலச்சந்திரன், சென்னையில் இருந்து நேற்று வீடியோ 'கான்பரன்சிங்'கில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மண்ணெண்ணெய் வினியோகத்தை சீர்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் மிச்சப்படுத்திய எண்ணெய் அளவு குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.



திருப்பூர் தாலுகா பகுதியில் 30 ஆயிரம் லிட்டர், பிற பகுதிகளில் 20 முதல் 30 ஆயிரம் லிட்டர் வரையிலும் மாதம்தோறும் மண்ணெண்ணெய் கொள்முதல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் மானியம் மீதப்படும். மண் ணெண்ணெய் பதுக்கல் செய்வோர் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்களின் நடவடிக்கை வெகுவாக குறைந்துள்ளது. டீலர் மீது நடவடிக்கை? திருப்பூரில் மண்ணெண்ணெய் பங்க் உரிமை மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நிறுவனம், சில நாட்களுக்கு முன் வெளிமார்க்கெட்டில் ஆயிரம் லிட்டர் மண்ணெண் ணெய் விற்பனை செய்துள்ளது. உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதன் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்த விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us