ADDED : செப் 21, 2011 06:38 PM
புதுடில்லி: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின், காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து வரும் 24ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டனாக இருந்த சச்சின், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா (கைவிரல் எலும்பு முறிவு), வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் (கணுக்கால் காயம்) ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், சச்சினும் இல்லாதது இழப்பு தான். சச்சின் விலகல் காரணமாக, வயிற்று தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ள ஹர்பஜன் சிங், மும்பை அணியின் கேப்டன் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.