/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடநெருக்கடிஅய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடநெருக்கடி
அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடநெருக்கடி
அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடநெருக்கடி
அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடநெருக்கடி
காஞ்சிபுரம் : மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 20 ஆண்டுகளாகியும் போதிய இடவசதியில்லாததால், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.
அரசு உத்தரவுப்படி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ஐந்து ஏக்கர் இடம் தேவை. இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும், போதிய இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் விளையாடுவதற்காக, பள்ளி அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளியில் கழிப்பிட வசதிகள் இல்லை. மாணவர்கள் இயற்கை உபாதைக்கு, திறந்த வெளிக்கு செல்கின்றனர். பழைய பள்ளி வளாகத்தில், ஆசிரியைகளுக்கு இரண்டு அறை கொண்ட கழிப்பிடம், புதிய வளாகத்தில், மாணவியருக்கு இரண்டு அறை கொண்ட கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இவை தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே வளாகத்தில் புதிதாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், இரண்டு அறை கொண்ட கழிப்பறை கட்டப்படுகிறது. பள்ளியில் 513 மாணவியர் படிப்பதால், கழிப்பறை போதுமானதாக இல்லை.இது குறித்து ஊராட்சி தலைவர் நாராயணசாமி கூறும்போது,'' கழிப்பறைகளுக்கு, மோட்டார் வசதியுடன் தண்ணீர் வசதி ஏற்படுத்தினோம். பைப்புகளை மாணவர்கள் உடைத்து விடுவதால், தொடர்ந்து சீரமைக்க முடியவில்லை. ஊராட்சி குழாயிலிருந்து நேரடியாக தண்ணீர் சப்ளை செய்ய, முடிவு செய்துள்ளோம். மேல்நிலைப் பள்ளிக்கு 5 ஏக்கர் இடம் இல்லாததால், நபார்டு திட்டத்தில் வகுப்பறைகள் கட்ட முடியவில்லை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நிதி ஒதுக்கும்படி கோரியுள்ளோம். இரு வகுப்பறைகள் கட்டித்தருவதாக கூறியுள்ளனர். மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, பள்ளிக்கு எதிரே குளம் புறம்போக்கு பகுதியில், ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்டது. அதில் கொஞ்சம் பட்டா நிலம் உள்ளது. விளையாட்டு மைதானத்திற்காக மேலத்தெருவை சேர்ந்தவர்கள் 2 ஏக்கர் கொடுத்தனர். அங்கு 2 லட்சம் ரூபாய்க்கு, ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, எம்.பி., விஸ்வநாதன், தொகுதி நிதியில் 3 லட்சம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்'' என்றார்.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராணி கூறும்போது,'மேல்நிலைப்பள்ளிக்கு கிராமப்புறமாக இருந்தால் 5 ஏக்கர், நகர்புறமாக இருந்தால் 2 ஏக்கர் நிலம் வேண்டும். அய்யம்பேட்டை பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வகுப்பை இரண்டாக பிரிக்கலாம். பள்ளி சார்பில் கூடுதல் வகுப்பறை கேட்டு கடிதம் கொடுத்தால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார்.
என்.ஏ.கேசவன்