உயர் கல்வி மாணவருக்கு மாதம் ரூ.1,000: ரூ.360 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
உயர் கல்வி மாணவருக்கு மாதம் ரூ.1,000: ரூ.360 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
உயர் கல்வி மாணவருக்கு மாதம் ரூ.1,000: ரூ.360 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
ADDED : ஜூலை 26, 2024 01:01 AM

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'தமிழ் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்த 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
ஏற்கனவே உள்ள, 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 28,159 மாணவியர், மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர்.
அதன் அடிப்படையில், தமிழ் புதல்வன் திட்டத்தில், 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க, ஆண்டுக்கு 393.60 கோடி ரூபாய், நிர்வாக செலவு, 7.87 லட்சம் ரூபாய் என மொத்தம், 401.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, அரசுக்கு கல்லுாரி கல்வி இயக்குனர் கடிதம் எழுதினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, நடப்பாண்டு திட்டத்தை, 360 கோடி ரூபாயில் செயல்படுத்த, அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விபரம்:
↓அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் உயர் கல்வி கற்றால், இத்திட்டத்தில் பயன் பெறலாம்
↓விண்ணப்பிக்க இணையதளம் உருவாக்கப்படும். மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும்
↓வருமான உச்சவரம்பு, இனம், ஒதுக்கீடு என, எந்த பாகுபாடும் கிடையாது. மாணவர் படிக்கும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்
↓அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களும் பயன் பெறலாம். தொலைதுார மற்றும் தபால் வழியில், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில், உயர் கல்வி கற்கும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற இயலாது
↓வேறு ஏதேனும் உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும், இத்திட்டத்தில் பயன் பெறலாம். மற்ற மாநில பள்ளிகளில் படித்த மாணவர்கள் பயன் பெற முடியாது
↓ஒரே குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டும், முதல் மூன்று ஆண்டுகள் ஊக்கத்தொகை பெற இயலும். மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் பயன் பெறலாம்
↓ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, 7ம் தேதிக்குள் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.