கூடங்குளத்தில் உண்ணாவிரதம்: தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை
கூடங்குளத்தில் உண்ணாவிரதம்: தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை
கூடங்குளத்தில் உண்ணாவிரதம்: தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை
UPDATED : செப் 15, 2011 06:09 PM
ADDED : செப் 15, 2011 11:36 AM
திருநெல்வேலி :கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உற்பத்தியை துவக்குவதை கண்டித்து பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்க உள்ளது.ஜப்பானில் புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட பாதிப்பு போலவும் பிரான்சில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்பு போலவும் கூடங்குளத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம்.
இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து உள்ளது என கூறி அணுஉலையை மூட வலியுறுத்தி செப்டம்பர் 11 முதல் உண்ணாவிரத போராட்டம் நடந்துவருகிறது. இடிந்தகரை புனித லூர்து ஆலயம் ஆலயம் முன்பாக நடந்துவரும் உண்ணாவிரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் பங்கேற்கின்றனர். கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்பட சுமார் 100 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். 15ம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஐந்தாவது நாளாக ஆனதால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.அணுஉலையை செயல்படுத்த விடக்கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாகும். இதற்கிடையே அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், செல்லப்பாண்டியன், சண்முகநாதன், பச்சமால், நெல்லை கலெக்டர் செல்வராஜ் ஆகியோர் கூடங்குளத்தில் போராட்ட கமிட்டியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்ட கமிட்டியின் சார்பில் உதயகுமார், மீனவர் அமைப்பு புஷ்பராயன், அண்டன் கோமஸ் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர். தமிழக அரசு எடுக்கும் முடிவை கொண்டே போராட்டம் தொடருமா அல்லது வாபஸ் ஆகுமா என்பது தெரியவரும்.


