ADDED : ஜூலை 13, 2011 02:02 AM
திருப்பூர் : 'நபார்டு' திட்டத்தில் திருப்பூர் மாவட்டத் துக்கு உட்பட்ட 28
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதி களை
மேம்படுத்த, கடந்தாண்டு ரூ.24.34 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான
பள்ளிகளில் கட்டுமான பணி துவங்கப்பட வில்லை; ஆரம்பிக்கப்பட்ட சில பள்ளி
களிலும் மந்தமாக நடந்து வருகிறது.'நபார்டு' திட்டம் மூலம் அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி
ஒதுக்கப்படுகிறது. கடந்த 2010-11ம் ஆண்டில் 20 அரசு மேல்நிலைப்பள்ளிகள்,
எட்டு அரசு உயர் நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பிட வசதி,
குடிநீர் தளவாடங்கள், ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் வசதிகளை ஏற்படுத்த,
24.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில்
கட்டுமான பணி, பொதுப்பணித்துறையால் மேற் கொள்ளப்படுகிறது. நிதி
ஒதுக்கப்பட்ட எட்டு பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ள, ஒப்பந்ததாரர்கள் டெண்டர்
எடுக்க முன்வரவில்லை; பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. அய்யங்காளிபாளையம்,
பல்லடம் ஆண்கள் உள்ளிட்ட 15 பள்ளிகளில் கட்டுமான பணி துவங்கப்பட்டு,
மந்தமான நிலையில் உள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, குறைவான நிதி
ஒதுக்கீடு, கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், கட்டுமான தொழிலாளர்கள்
பற்றாக்குறை உள்ளிட்டவை, பணிகள் மந்தமாவதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பெரும்பாலான பள்ளிகளில் கட்டுமான
பணி துவக்கப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், அப்பணிகளை முடிக்க
முடியாது என்பதால், சில பள்ளிகளில் டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்
வரவில்லை. சில பள்ளிகளுக்கு கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது,' என்றனர்.