PUBLISHED ON : செப் 12, 2011 12:00 AM

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : 'ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும், சி.பி.ஐ., தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசு தானே; அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டனர். நான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று, சி.பி.ஐ.,யை விரைவாகச் செயல்பட வைத்தேன். வழக்கு விசாரணையில் எங்காவது, சி.பி.ஐ., தவறு செய்தால், நான் விட மாட்டேன்.
தமிழக மின் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு: மின் பற்றாக்குறையைக் குறைக்க பல திட்டங்களை தமிழக அரசு எடுக்கிறது. இதன் மூலம், 2012 ஆகஸ்ட் மாதத்தில், மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். இந்த இலக்கை எட்ட, சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவிப்பதை தமிழக அரசு கொள்கையாகக் கொண் டுள்ளது.
தமிழக மாநில தேர்தல் கமிஷனர், சோ.அய்யர் பேட்டி: தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு அரசியல் கூடாது என்று கடுமையாக மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருக்கிறது. எவ்விதமான புகார்களுக்கும் இடம் தராத வகையில் பணியாற்ற வேண்டும். மாநில தேர்தல் கமிஷனுக்கு, என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அது, முழுமையாக பயன்படுத்தும். நியாயமாகவும், சட்டப்படியாகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நிறைவேற்றப்படும்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு: மதவாதம், ஜாதி என்ற பெயரால், இளைஞர்கள் வன்முறை பாதையில் திசை திருப்பப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் வழிகாட்ட வேண்டும். தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ள, அரசமைப்பும், மக்கள் அமைப்பும் போதுமானதா, இல்லையென்றால் சவால்களை எதிர்கொள்வதற்கான பலத்தை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து ஆலோசனையை கவுன்சில் தெரிவிக்க வேண்டும்.
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி பேட்டி: உலகம் முழுவதும் குழந்தைகளின் உரிமை, சுதந்திரத்திற்கு மிகுந்த மதிப்பளிக்கப்படுகிறது. நம் சமூகத்தில் மட்டும் நாமே ஒன்றை முடிவு செய்துவிட்டு, குழந்தைகளை அதைச் செய்யச் சொல்கிறோம். பொத்தாம் பொதுவாக ஒரு விஷயத்தை கட்டாயமாக்குவது, எந்த நன்மையும் தராது.