இலவச "லேப்-டாப்' டெண்டர் கடைசி தேதி நீட்டிப்பு
இலவச "லேப்-டாப்' டெண்டர் கடைசி தேதி நீட்டிப்பு
இலவச "லேப்-டாப்' டெண்டர் கடைசி தேதி நீட்டிப்பு
ADDED : ஜூலை 11, 2011 11:17 PM

சென்னை : மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கவிருக்கும், 'லேப்-டாப்'களை, சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கான டெண்டர் விண்ணப்ப கடைசி தேதி, வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, லேப்-டாப் சப்ளை செய்யும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் டெண்டர், கடந்த ஜூன் 4ல் துவங்கியது. தமிழக அரசின் 'எல்காட்' நிறுவனத்தில், ஜூலை 11 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அன்றைய தினமே டெண்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று, 'எல்காட்'டில் டெண்டர் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து, எல்காட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: லேப்-டாப் டெண்டரில் சர்வதேச அளவிலான நிறுவனங்களும் பங்கேற்கலாம் என அறிவித்தோம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், புதிய மாடல்களை கொண்டு வரவும், அதன் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை டெண்டரில் தெரிவிக்கவும், கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனால், டெண்டர் விண்ணப்பங்கள் பெறும் தேதி, வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.