சி.பி.ஐ., மூலம் பழிவாங்குகிறது காங்., : ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
சி.பி.ஐ., மூலம் பழிவாங்குகிறது காங்., : ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
சி.பி.ஐ., மூலம் பழிவாங்குகிறது காங்., : ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
ADDED : செப் 05, 2011 11:59 PM

புதுடில்லி: ''சி.பி.ஐ., மூலமாக பழிவாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.
அதே நேரத்தில், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியை பாராட்டுகிறேன்,'' என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக, டில்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை சி.பி.ஐ., எப்படி பின்பற்றுகிறது என்பது குறித்து விரிவான குறிப்பு ஒன்றை தயாரித்துள்ளேன். அதை விரைவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பேன். சி.பி.ஐ., என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், ஆந்திராவில் அது சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சொல்லவே டில்லி வந்துள்ளேன். முலாயம் சிங், சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, சி.பி.ஐ.,யின் பாரபட்சமான செயல்பாடுகள் பற்றி விவரிப்பேன். எனது தந்தை மற்றும் என் கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சிக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இருந்தும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த பா.ஜ.,வுக்கும், அந்தக் கட்சியின் தலைவர்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவிப்பேன். அதேநேரத்தில், எனது கட்சியின் கொள்கைக்கும், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால், எந்த சூழ்நிலையிலும் நான் பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டேன். மொத்தத்தில் சி.பி.ஐ., மூலமாக என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது. இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.