/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை தஞ்சை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கைதேர்தல் விதி மீறினால் நடவடிக்கை தஞ்சை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை தஞ்சை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை தஞ்சை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை தஞ்சை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 27, 2011 11:55 PM
தஞ்சாவூர்: தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கவேண்டிய நடத்தை விதிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கரன் தலைமை வகித்து பேசியதாவது: அரசியல் கட்சியினர் அல்லது முகவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் மத, மொழி, வேற்றுமைகளை ஏற்படுத்தவோ, மனக்கசப்பை ஏற்படுத்தவோ, கொந்தளிப்பை ஏற்படுத்தவோ கூடாது. சாதி, மத, இன உணர்வுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தூண்டும் வகையில் வேண்டுகோள் விடுக்க கூடாது. வழிபாட்டு தலங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது. சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்களை அச்சிடும்போது அச்சடிப்பவர், வெளியீட்டாளர் பெயர் , முகவரி வெளியிடப்பட வேண்டும். ஓட்டுச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் வாக்கு சேகரித்தல் மற்றும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. காலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணி வரை உரிய அலுவலரின் அனுமதி பெற்று ஒலிபெருக்கிகளை பயன்படுத்தலாம். பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உரிய அலுவலரின் அனுமதி பெறுதல் வேண்டும். வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் தேர்தல் முகாம்கள் அமைக்க கூடாது. 200 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர் சார்பில் தேர்தல் முகாம் அமைக்கலாம். ஓட்டுச்சாவடி உள்ளேயும், வெளியேயும், நுழைவாயில் பகுதியிலும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. மாதிரி நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள போது பதவிவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவியின் அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. உள்ளாட்சி அலுவலக கட்டடங்கள், மற்றும் அறைகளை அரசியல் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்களின் முகவர்களுக்கோ புகார்கள் அல்லது பிரச்னை இருந்தால் அது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார். கூட்டத்தில் எஸ்.பி அனில்குமார் கிரி, டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வரதராஜன், நுகர்பொருள் வாணிபக்கழக முது நிலை மண்டல மேலாளர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முகமது ஆரிப்சாகிப், மோகன், மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.