Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்

தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்

தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்

தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்

UPDATED : ஜூலை 11, 2011 11:46 PMADDED : ஜூலை 11, 2011 11:44 PM


Google News
Latest Tamil News
மேலூர்: ரோட்டை கடந்தவரை காரை ஏற்றி கொன்று விட்டு தப்பிய நபரை, தனி ஒரு நபராக மூன்று மாதம் தேடி கண்டுபிடித்து, மேலூர் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்தார் இறந்து போனவரின் மகன். மதுரை மேலூர் அருகில் உள்ளது தும்பைப்பட்டி ஊராட்சி. இவ்வூரைச் சேர்ந்த மீராலெப்பை, 55. சென்னை புரசைவாக்கத்தில் ரெடிமேட் கடை நடத்தி வந்தார். விடுமுறையில் தும்பைபட்டிக்கு வந்த அவர், 2011 ஏப்.,17ம் தேதி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள, பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார். காலை 8.30 மணிக்கு ரோட்டை கடந்தார். அப்போது திருச்சியை நோக்கி சென்ற கிரே கலர் இண்டிகா கார், மீராலெப்பை மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மோதிய வேகத்தில், காரின் முன்பக்க இண்டிகேட்டர் உடைந்து அந்த இடத்தில் கிடக்க, கார் நிற்காமல் சென்றது. அவ்விடத்திற்கு வந்த மீராலெப்பையின் மகன் ராஜாமுகமது, 35, அருகில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். யாரும் காரின் எண்ணை கவனிக்கவில்லை என தெரிந்தது. போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என, வழக்கை முடிக்க முயன்றனர்.

அதில் உடன்பாடு ஏற்படாத ராஜாமுகமது, கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்கு அலைந்து பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார். இத்தகவலை மேலூர் போலீசாரிடம் அவர் தெரிவிக்க, ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாடசாமி, டிரைவரை கோர்ட்டில் ரிமாண்ட் செய்தார். திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து, தனது குடும்பத்தை காப்பாற்றும் ராஜாமுகமது, மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்த நீண்ட தேடலை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மரியம் பிச்சை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க, ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். ஆனால், தனி ஒரு நபராக போராடி வெற்றி பெற்ற ராஜாமுகமதை பாராட்டத்தான் வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us