Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/செடிகள் மாடுகளுக்கு உணவாகும் அவலம் : குறுகிய இழை பருத்திக்கு விலை இல்லை கவலை

செடிகள் மாடுகளுக்கு உணவாகும் அவலம் : குறுகிய இழை பருத்திக்கு விலை இல்லை கவலை

செடிகள் மாடுகளுக்கு உணவாகும் அவலம் : குறுகிய இழை பருத்திக்கு விலை இல்லை கவலை

செடிகள் மாடுகளுக்கு உணவாகும் அவலம் : குறுகிய இழை பருத்திக்கு விலை இல்லை கவலை

ADDED : ஜூலை 25, 2011 09:15 PM


Google News

உடுமலை : குறுகிய இழை பருத்திக்கு விலை இல்லாததால், பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாமல், மானாவாரியாக பருத்தி பயிரிட்ட விவசாயிகள், விளைநிலங்களில் மாடுகளுக்கு பருத்தி செடிகளை உணவாக்கும் அவல நிலை உள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., மண்டல பாசனம் மற்றும் மானாவாரியாக பருத்தி பயிரிடப்படுகிறது.

தேவனூர்புதூர், ஆண்டியூர், கொடிங்கியம், ராவணாபுரம், கரட்டுமடம் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரியாக குறுகிய இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்படுகின்றன.வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு மானாவாரி பருத்தி பயிரிடப்படுகிறது. இச்சாகுபடியில் ஏக்கருக்கு அதிகபட்சமாக ஐந்து குவிண்டால் பருத்தி விளைச்சல் இருக்கும். குறுகிய இழை பருத்தி ரகத்துக்கு கடந்தாண்டு நல்ல விலை கிடைத்து வந்தது.இந்நிலையில், நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் மில் நிர்வாகத்தினர் பருத்தி கொள்முதலை வெகுவாக குறைத்தனர். இதனால், பருத்தி விலை கடந்த இரண்டு மாதங்களாக வீழ்ச்சியில் உள்ளது. தற்போது குறுகிய இழை பருத்தி ரகத்துக்கு சராசரியாக கிலோவுக்கு 35 ரூபாய் வரை கிடைக்கிறது. பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாத விலை மற்றும் விளைச்சல் குறைவு போன்ற காரணங்களால், மானாவாரியாக பருத்தி பயிரிட்ட விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் உள்ள செடிகளை மாடுகளை மேயவிட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'போதிய அளவு பருவமழை பெய்யாத தால் மானாவாரியாக பயிரிடப்பட்ட பருத்தி செடிகளில் விளைச்சல் குறைவாக உள்ளது. மேலும், விலை பல மடங்கு சரிந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக பருத்தி எடுக்கும் பணிகளுக்கு யாரும் வருவதில்லை. அதிக கூலி கொடுத்து பருத்தி பறித்தாலும் விலை இல்லாததால் நஷ்டமே ஏற்படுகிறது. எனவே, பருத்தி பயிரிட்டுள்ள விளைநிலங்களில் மாடுகளை மேய்த்து வருகிறோம்,' என்றனர். மானாவாரி பருத்தி சாகுபடியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தால் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறி வருகின்றனர். இதனால், உடுமலை பகுதியில் பருத்தி சாகுபடி பரப்பு இந்தாண்டு குறையும் வாய்ப்புள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us