கேரளா: மது அருந்த வயது வரம்பு அதிகரிப்பு புதிய நடைமுறை அமல்
கேரளா: மது அருந்த வயது வரம்பு அதிகரிப்பு புதிய நடைமுறை அமல்
கேரளா: மது அருந்த வயது வரம்பு அதிகரிப்பு புதிய நடைமுறை அமல்
ADDED : ஜூலை 28, 2011 04:08 AM
திருவனந்தபுரம் : புதிய மதுபான சட்டத்தின்படி, கேரளாவில் மது அருந்துவதற்கான வயது வரம்பு, 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபர் மூன்று லிட்டர் 'சரக்கு' தான் கைவசம் வைத்திருக்க முடியும். கேரளாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களிடையே மதுவுக்கு அடிமையாதல் அதிகரித்து வருவது, அரசுக்கு பெரிய தலைவலியை உருவாக்கி உள்ளது.18 வயது நிரம்பியோர் மது அருந்தலாம் என்ற நடைமுறையும், இதற்கு காரணமாக அமைந்து விட்டது.மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதைத் தடுக்க, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, மாநிலத்தில் 21 வயது நிறைவடைந்தோர் மட்டுமே மது வாங்கவோ, அருந்தவோ முடியும். மேலும், மதுபானக் கடைகளில், மது விற்பவர்கள் வயது வரம்பையும், குறைந்தபட்சம் 18 லிருந்து 21ஆக, மாநில அரசு உயர்த்தியுள்ளது.மேலும், மாநிலத்தில் சுற்றுலாத் தலங்களான வைத்திரி, ஆலப்புழா, குமரகம், குமளி, மூணாறு, கோவளம், வர்க்கலா, போர்ட் கொச்சி, பேக்கல் மற்றும் அஷ்டமுடி ஆகிய இடங்களில் மதுபான பாருடன் கூடிய ஓட்டல்களுக்கான அனுமதி வழங்குவதிலும் புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். அதேபோல், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் மதுபானக் கடைகள் செயல்படும் நேரத்திலும், மாநில அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கிராமப் பகுதிகளில் மதுபான 'பார்'களுக்கு அனுமதி வழங்கும்போது, ஒரு பாருக்கும் மற்றொரு பாருக்கும் இடையில் குறைந்தபட்சம் மூன்று கி.மீ., இடைவெளி தேவை. நகர்ப்புறங்களில் இது ஒரு கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். வரும் 2013ம் ஆண்டு முதல், குறைந்தது 25 தங்கும் அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே பார் அனுமதி வழங்கப்படும். இதுபோன்ற பல்வேறு புதிய நடைமுறைகளை மாநில அரசு கொண்டு வந்துள்ளதாக, கலால் துறை அமைச்சர் பாபு தெரிவித்தார்.