தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்' : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்
தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்' : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்
தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்' : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அக்., 26ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும், கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், அதிகளவில் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் சொந்த ஊருக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் செல்வர். இதே போல், தீபாவளி பண்டிகைக்காக செல்ல விரும்பிய, தென் மாவட்ட மக்கள் ரயில்களில் செல்வதற்கு, தற்போது இடமில்லை. வரும் அக்., 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன. அதே போல், கோவை செல்லும் ரயில்களிலும் இடமில்லை. இருக்கை வசதி கொண்ட ரயில்களில் மட்டுமே இடம் உள்ளன.
இதனால், பொதுமக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல, அரசு பஸ்களையோ அல்லது அதிக கட்டணம் கொடுத்து, ஆம்னி பஸ்களையோ நாட வேண்டியுள்ளது. குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்கும், நோயாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பஸ்களில் பயணிப்பது சிரமமாக இருக்கும்.
எனவே, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து, திருச்செந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கானோர், சென்னையில் வேலைக்காக குடிபெயர்ந்துள்ளனர். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் தான், ஊர்களுக்குச் செல்ல முடியும்.
நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமென்பதால், ரயில் தான் வசதியாக இருக்கும். ஆனால், தற்போது தீபாவளி பண்டிகைக்கு செல்ல, ரயில்களில் இடமில்லை. பண்டிகைக்கு இன்னும், 90 நாட்கள் இருக்கும் நிலையில், ரயில்களில் இடமில்லாததால், ஊருக்குச் செல்வோமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தெற்கு ரயில்வே, தீபாவளிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இந்த சிறப்பு ரயில்களை தற்போதே அறிவித்தால், அந்த ரயில்களில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்பது குறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமனிடம் கேட்டபோது, 'சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை, உயர் அதிகாரிகள் தான் அறிவிப்பர். இருப்பினும், தெற்கு ரயில்வேயில், தற்போது சராசரியாக நாளொன்றுக்கு, 5.8 சதவீதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, அவ்வப்போது, சிறப்பு ரயில்கள் இயக்குகிறோம். தீபாவளிக்கு மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகளைப் பொறுத்து, சிறப்பு ரயில்கள் விடப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.