இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்
இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்
இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்

சென்னை:வரும் 15ம் தேதி முதல், தமிழக அரசு வழங்கவிருக்கும், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை விற்பனை செய்தால், குடிமைப் பொருள் வழங்கல் சட்டப்படி தண்டனை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பச்சை நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு, இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை அரசின் சார்பில், இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இலவச பொருட்கள், தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி நெறிமுறைகள் வகுத்து, வெளிப்படையான டெண்டர் மூலம் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.நலத்திட்டங்களில் கிடைக்கும் பொருட்களை, எந்த காரணம் கொண்டும், விற்பனை செய்யக் கூடாது. எளியவர்களாக இருப்போர், வாங்கும் சக்தியில்லாதோர் ஆகியோரின் வாழ்வை முன்னேற்றவே இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அரசின் நோக்கத்திற்கு மாறாக, இந்த பொருட்களை விலைக்கு விற்பதும், விலை கொடுத்து வாங்குவதும் சட்டப்படி குற்றம். அன்பளிப்பாக அரசு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வோர் மட்டுமின்றி, வாங்குவோருக்கும் தண்டனை தர சட்டத்தில் இடமுள்ளது. இந்திய அடிப்படை குடிமைப் பொருள் சட்டப்படி தண்டிக்க முடியும். இலவச அரிசி விற்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும் நடவடிக்கையும் இதற்குப் பொருந்தும்.
கடந்த ஆட்சியில், இலவசமாக வழங்கப்பட்ட கலர் 'டிவி' பல இடங்களில் 500 முதல் 1,500 ரூபாய் வரை விற்றது. இதில், ஒரு சிலர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிந்தனர். பல தனியார் ஓட்டல்கள், அலுவலகங்கள், பெட்டிக் கடைகள், அரசு அலுவலகங்கள், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கலர் 'டிவி'க்கள் இருந்தன.அன்பளிப்பாக வழங்கப்படும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு இதுபோன்ற நிலை ஏற்படாமல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் மீது, 'இது அரசின் அன்பளிப்பு; விற்பனைக்கல்ல' என்ற வாசகங்களை அச்சடித்தோ அல்லது அழிக்க முடியாத வகையிலோ பதிக்க, பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.