PUBLISHED ON : ஜூலை 15, 2011 12:00 AM

தினேஷ் திரிவேதிக்கு ஜாக்பாட்!
இந்த நிமிடத்தில், அதிகபட்ச சந்தோஷத்துடன் இருக்கும் அரசியல்வாதி யார் தெரியுமா? திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தினேஷ் திரிவேதி தான்.
ரயில்வே துறைக்கு கேபினட் அமைச்சர் என்றால், யாருக்குமே சந்தோஷம் வரத்தானே செய்யும். இந்த பதவி தனக்கு கிடைக்கும் என, திரிவேதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவரும், ரயில்வே இணை அமைச்சராக இருந்தவருமான முகுல் ராய்க்கு தான், கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என, அனைவரும் எதிர்பார்த்திருந்திருந்தனர். ஆனால், அமைச்சரவை மாற்றத்துக்கு, ஓரிரு நாட்களுக்கு முன், அசாமில் நடந்த ரயில் விபத்து, முகுல் ராய்க்கு வினையாக அமைந்து விட்டது. ரயில்வே இணை அமைச்சர் என்ற முறையில், விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தும்படி, முகுல் ராய்க்கு, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். பிரதமரின் உத்தரவை, முகுல் ராய் பொருட்படுத்தவில்லை. இதனால், பிரதமருக்கும், முகுல் ராய்க்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில், அமைச்சரவை மாற்றம் குறித்த பட்டியல் வெளியானது. அதில், ரயில்வே கேபினட் அமைச்சர் பதவியில், தன் கட்சியைச் சேர்ந்த, தினேஷ் திரிவேதியின் பெயர் இருந்ததை பார்த்த முகுல் ராய், அதிர்ச்சியில் நொந்து போய் விட்டார். 'கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என, கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தினேஷ் திரிவேதி விஷயத்தில், இதை நேரடியாகவே பார்த்து விட்டேன்' என, புலம்பி தவிக்கிறார், முகுல் ராய்.