அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு
அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு
அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா : சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு
ADDED : அக் 01, 2011 11:46 PM

புதுடில்லி: 'அன்னா ஹசாரே குழுவினர் பரிந்துரைத்துள்ள ஜன் லோக்பால் மசோதாவால், எங்கள் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அதிகாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது' என, பார்லிமென்ட் நிலைக் குழுவிடம், சி.பி.ஐ.,யும், மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் குழுவுக்குத் தரப்பட வேண்டும் என்றும், சி.பி.ஐ., மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அன்னா ஹசாரே குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, பல்வேறு தரப்பினரிடமும், அபிஷேக் சிங்வி தலைமையிலான, பார்லிமென்ட் நிலைக் குழு, கருத்து கேட்டு வருகிறது. இந்தக் குழு முன், சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார் ஆகியோர் ஆஜராகி, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, ஹசாரே குழுவினர் பரிந்துரைத்துள்ள ஜன் லோக்பால் மசோதா நடைமுறை படுத்தப்படும்பட்சத்தில், தங்களின் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அதிகாரத்துக்கு, எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை, அவர்கள் வலியுறுத்தினர்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார் கூறுகையில், 'ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம், எங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். எங்கள் அமைப்பின், தற்போதைய நிர்வாகக் கட்டமைப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதேநேரத்தில், மிகப் பெரிய அளவில் ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகளைத் தண்டிக்கும் வகையிலான, பலமான லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.
சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி., சிங் கூறுகையில், 'வழக்கு விசாரணைகளில், சி.பி.ஐ., சுதந்திரமாகச் செயல்படும் வகையில், அதிகாரம் வழங்கப்பட வேண்டும். சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவை, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவது சரியல்ல. இதுபோன்ற நடவடிக்கை, சி.பி.ஐ.,யின் செயல்பாடுகளை பலவீனமாக்கி விடும். ஆனாலும், ஊழல் வழக்குகள் குறித்த பொதுவான கண்காணிப்பை, லோக்பால் மேற்கொள்வதற்கு ஆதரவு அளிக்கிறோம்' என்றார்.
இந்த தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


