ADDED : அக் 01, 2011 12:27 AM
திண்டிவனம் : கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த தே.மு.தி.க., பிரமுகர் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.திண்டிவனம் அடுத்த தீவனூர் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் கணபதி, 30.
தே.மு.தி.க., மயிலம் ஒன்றிய கேப்டன் மன்ற செயலர். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வயலுக்கு பூ பறிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சங்கர், ராஜூ, மணிகண்டன், எழில் ஆகியோருடன் கணபதி மது அருந்தியுள்ளார். அவர் அங்கிருந்து திடீரென சென்றதாகவும், நீண்ட நேரம் திரும்பி வராததால், உடனிருந்த நான்கு பேரும் கணபதியின் உறவினருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து கணபதியின் உறவினர்கள் தேடிப் பார்த்தபோது, அவர்கள் மது அருந்திய இடத்திற்கு அருகில் இருந்த, தரைக் கிணற்றில் கணபதி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார்.கிணற்றில் மூழ்கி இறந்த கணபதியின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். ரோஷணை போலீசார், பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.