நிலம் அபகரித்த திருச்சி துணை மேயர் போலீஸ் கமிஷனரிடம் விவசாயி புகார்
நிலம் அபகரித்த திருச்சி துணை மேயர் போலீஸ் கமிஷனரிடம் விவசாயி புகார்
நிலம் அபகரித்த திருச்சி துணை மேயர் போலீஸ் கமிஷனரிடம் விவசாயி புகார்
ADDED : ஜூலை 27, 2011 12:58 AM
திருச்சி : தனக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புடைய பூர்வீக சொத்தை, திருச்சி மாநகராட்சி தி.மு.க., துணைமேயர் அன்பழகன் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து கொண்டதாக, விவசாயி பழனிச்சாமி, மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தார். திருச்சி, ஆசாத்நகர், முதல் தெருவைச் சேர்ந்த குழந்தை சோழகர் மகன் விவசாயி பழனிச்சாமி, தன் மகன்களுடன் திருச்சி கமிஷனர் மாசானமுத்துவிடம் நேற்று புகார் அளித்தார். அதில், கே.கே., நகர் எல்லைக்குட்பட்ட ஆசாத்நகரில், 50 கோடி ரூபாய் மதிப்புடைய, 4.90 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், அதை, 2010, பிப்ரவரி 14ம் தேதி காலை 11 மணிக்கு, துணைமேயர் அன்பழகன், சத்யம் ஓட்டல் உரிமையாளர் சத்தியமூர்த்தி, முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும், அப்போதைய கே.கே., நகர் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், எஸ்.ஐ., பால்ராஜ் மற்றும் ரவுடிகளுடன் வந்து, தன்னுடைய இடத்தில் அத்துமீறி நுழைந்து காம்பவுண்ட் சுவர் கட்டினர் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக தெரிவித்தார். இதுபற்றி, கன்டோன்மென்ட் உதவி கமிஷனரிடம் புகார் கொடுத்தபோது, 'இது துணைமேயர் அன்பழகன் பிரச்னை. கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடிவிடுங்கள்' என்ற தகவலையும் தெரிவித்தார். எனவே, 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைமேயருக்கு சொத்துக்களை ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், எஸ்.ஐ., பால்ராஜ், உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், துணைமேயர் அன்பழகன், சத்தியமூர்த்தி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் உட்பட, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.முத்தமிழ்ப் பேரவைக்கு ஏன் இந்த சலுகை? : ஆறு கிரவுண்ட் நிலம் ஆண்டுக்கு ரூ.1,000 யில் குத்தகை
சென்னை, அடையாறு திரு.வி.க. பாலம் அருகில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலம், ஆண்டுக்கு 1,000 ரூபாய் கட்டணத்தில், 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், முத்தமிழ்ப் பேரவை என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து கோடி ரூபாயில் கலையரங்கம் கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதில், கடலோர ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சி.எம்.டி.ஏ.,வின் பொது தகவல் அதிகாரி, கடந்த 20ம் தேதி அளித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்: அடையாறு சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரில், (ஆந்திர மகிளா சபா அருகில்) பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக உள்ள, ஏழு கிரவுண்ட் நிலத்தை, 'டி.என். ராஜரத்தினம் பிள்ளை கலையரங்கம்' கட்டுவதற்காக, தங்களுக்கு வழங்கக் கோரி முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை தலைவர் என். ரமணி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மனு (தேதி குறிப்பிடப்படவில்லை) அளித்தார்.
நிலம் ஒதுக்கீடு: இதன் மீது, கருணாநிதியின் பரிந்துரைப்படி, சத்யா ஸ்டுடியோ அருகில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட, 2002ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அருகில், காலியாக உள்ள 7.33 கிரவுண்ட் நிலத்தில் (சர்வே எண்: 4269/3 ), மூன்று கிரவுண்ட் நிலத்தை, ஆண்டுக்கு 1,000 ரூபாய் வீதம், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில், முத்தமிழ்ப் பேரவைக்கு ஒதுக்கி, 2009ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் க. இராமசுந்தரம் (அரசாணை எண்: 111) உத்தரவிட்டார்.இங்கு கலையரங்கம் (தரைதளம், முதல்தளம்) கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரி, முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள், 2010 ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்தனர். மூன்று கிரவுண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆறு கிரவுண்ட் பரப்பளவுக்கான அரங்கம் கட்ட அனுமதி கோரப்பட்டது. எனவே, அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ., மறுத்தது. இந்த விவரத்தை, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், 2010ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதியிட்ட தனது கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்.இதைச் சுட்டிக்காட்டி, முத்தமிழ்ப் பேரவை கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மூன்று கிரவுண்ட் நிலத்துடன் ,மேலும் மூன்று கிரவுண்ட் நிலமும் சேர்த்து, மொத்தம் ஆறு கிரவுண்ட் நிலமும் 1,000 ரூபாய்க்கே, 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 30ம் தேதி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் க.இராமசுந்தரம் (அரசாணை எண்: 253) உத்தரவிட்டார்.
சி.எம்.டி.ஏ., ஆட்சேபம்: இதையடுத்து, முத்தமிழ்ப் பேரவையின் திட்ட அனுமதி கோரும் விண்ணப்பம் மீதான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம், 2010ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. இந்தத் திட்டம், அடையாறு ஆற்றுக்கு மிக அருகில் வருவதால், கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி, மத்திய சுற்றுச்சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழும், திரு.வி.க. பாலத்தை ஒட்டி இருப்பதால், நெடுஞ்சாலைத் துறையின் தடையின்மைச் சான்றிதழும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், விண்ணப்பத்தை மீண்டும் திருப்பி அனுப்பினர்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்: இத்திட்டத்தால், திரு.வி.க. பாலத்தின் உத்தேச விரிவாக்கத் திட்டத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி கடிதம் (எண்: 147/ஜேடியு/2010) அளித்தார்.நெடுஞ்சாலைத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் மட்டுமே போதுமானது என்றும், சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ள வளர்ச்சி விதிகளின்படி, 'இடிக்கப்படும் அல்லது இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும்போது மட்டுமே சுற்றுச்சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழ் தேவை' என்பதால், இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் அறிவுறுத்தல் தங்களுக்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டு, முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள், கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் அளித்தனர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டியதில்லை என்பதற்கான, குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், கடந்த ஜனவரி 27ம் தேதி, முத்தமிழ்ப் பேரவைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார். அதே நாளில், இச்சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு, கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கும், சி.எம்.டி.ஏ., கடிதம் அனுப்பியது. இதற்காக சி.எம்.டி.ஏ., முதலில் அனுப்பிய கட்டட வரைபடத்தை, அதில் உள்ள விவரங்கள் அடிப்படையில், ஆய்வு செய்த கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இத்திட்டப்பகுதியின் எல்லைகள், 130 மீட்டரில் இருப்பதாகவும், இதனை சரிபார்த்துக் கொள்ளுமாறும் சி.எம்.டி.ஏ.,வுக்கு ஜனவரி 31ம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து திருத்தப்பட்ட புதிய வரைபடம், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அளிக்கப்பட்டது.இதன் பின்னர், 'அடையாறு ஆற்றிலிருந்து, 100 மீட்டருக்குள் இத்திட்டம் அமைந்திருப்பதால், இது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 2ன் கீழ் வருகிறது. எனவே, புதிதாகக் கட்டப்படும் திட்டமானாலும், இடித்து புதிதாகக் கட்டப்படும் கட்டடமானாலும் மத்திய சுற்றுச் சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மேலும் சில கருத்துகள் தெரிவித்து, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிப்ரவரி இரண்டாம் தேதியும், சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதங்கள் தொடர்பாக அதேநாளில் நடைபெற்ற சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூட்டத்தில், ஆய்வு செய்யப்பட்டது. முத்தமிழ்ப் பேரவையின் திட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்கக் கோரி, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தைக் கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில், முத்தமிழ்ப் பேரவையின் திட்டப் பகுதி, அடையாறு ஆற்றில் இருந்து எத்தனை மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது என்பதில், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'இத்திட்டப் பகுதி அடையாறு ஆற்றில் இருந்து, 40 மீட்டர் தூரத்துக்குள், அதாவது 130 அடியில் அமைந்துள்ளது' என்பதை, பிப்ரவரி 22ம் தேதியிட்ட கடிதத்தில் தெளிவுபடுத்தினர்.
திட்டத்துக்கு ஒப்புதல்: இதையடுத்து, பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்ற, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், முத்தமிழ்ப் பேரவையின் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், இதற்கு திட்ட அனுமதி வழங்கலாம் என ஆணையம் முடிவு செய்தது. இதை ஏற்று சில நிபந்தனைகளுடன் இத்திட்டத்துக்கான திருத்தப்பட்ட வரைபடத்துக்கு, சி.எம்.டி.ஏ., மார்ச் 7ம் தேதி ஒப்புதல் அளித்தது.
சந்தேகங்கள்: ஆற்றில் இருந்து, 100 மீட்டருக்குள் கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி ஆட்சேபங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய போது, முதலில் தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதி செய்து ஒப்புக் கொண்டது. பின்னர், ஒழுங்குமுறை விதிகளின்படி, ஆட்சேபங்களைத் தாண்டி, இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கலாம் என்று, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் பின்னணி, பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாக உள்ளது.
பொதுவாக, இதுபோன்ற ஆட்சேபங்கள் உள்ள திட்டங்கள், சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்காமல், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, சம்பந்தப்பட்ட திட்டப் பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் துவங்கியிருக்கக் கூடாது. ஆனால், முத்தமிழ்ப் பேரவையின் திட்டத்துக்கான அனுமதி கோரும் விண்ணப்பம், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்படும் முன்பே, அங்கு பாதிக்கும் அதிகமான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இட நெருக்கடி காரணமாக, அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளுக்கு, நகருக்குள் அண்மைக்காலமாக நிலம் ஒதுக்கப்படுவது இல்லை. இந்த நிலையில், முத்தமிழ்ப் பேரவைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது, அதற்கு விதிகளை மீறி கட்டட அனுமதி அளிக்கப்பட்டது ஆகியவற்றின் பின்னணியில் நடந்த முறைகேடுகள் குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
விதிகள் என்ன?
கடலோர ஒழுங்குமுறை விதிகள் 3ல்(2)ன் உட்பிரிவுகள் (4)(5) ஆகியவற்றின்படி, அடையாறு போன்ற ஆற்றிலிருந்து, 100 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே உள்ள கட்டடங்களை புதுப்பிப்பது, இடித்துவிட்டு புதிதாகக் கட்டுவது அனுமதிக்கப்படும். ஆனால், பழைய கட்டடத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தரைப்பரப்புக் குறியீட்டு அளவில், எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.கடலோர ஒழுங்குமுறை விதிகள் 4ல்(2)ன் உட்பிரிவுகள் (1)(2) ஆகியவற்றின்படி, இத்தகைய திட்டங்களை மாநில கடலோர மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பிறகே, திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும். முத்தமிழ்ப் பேரவையின் திட்ட விவகாரத்தில், இந்த விதிகளை சி.எம்.டி.ஏ., பின்பற்றியுள்ளது. 'ஆனால், இது மாதிரியான திட்டங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்த அறிக்கையும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையின்மைச் சான்றிதழும் அவசியம் என்ற விதி பின்பற்றப்படவில்லை' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நிலத்தின் மதிப்பு ரூ.11.52 கோடி
முத்தமிழ்ப் பேரவைக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்னர், இந்த நிலத்தின் சந்தை மதிப்பு குறித்து பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர் 2008ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியும், 2009ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியும் அளித்த கடிதங்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்: சிவாஜி கணேசன் மணி மண்டபம் கட்ட, கடந்த 2002ம் ஆண்டு இதே பகுதியில் நிலம் வழங்கப்பட்ட போது, ஒரு சதுர அடியின் மதிப்பு 3,621 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி கணக்கீடு செய்யும் போது, 2009ம் ஆண்டு நிலவரப்படி, இங்கு ஒரு சதுர அடி நிலத்தின் மதிப்பு 8,000 ரூபாய் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில் பார்த்தால், தற்போது முத்தமிழ்ப் பேரவைக்கு ஆண்டுக் கட்டணம் 1,000 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு 11.52 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
யார்?
முத்தமிழ்ப் பேரவை, கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி பி.அமிர்தம், இ.வி. ராஜன், டி.ஆர்.பாப்பா, டி.ஆர். சீனிவாசன், அரிதுவார மங்கலம் ஏ.கே. பழனிவேல், லக்ஷப்ப பிள்ளை, வனஜா சுப்பிரமணியன், ஜி.ராமானுஜம், வழுவூர் ரவி ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதில் முதல் நிறுவனரான அமிர்தம், இதன் செயலராகவும், இ.வி. ராஜன் பொருளாளராகவும் உள்ளனர். 9,000 ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு, உறுப்பினர் கட்டணம் 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட இந்தியக் கலைகளின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாக, இதன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வி.கிருஷ்ணமூர்த்தி


