தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி
தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி
தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
மாநில அரசுகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பெறும் நிதியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், பெரும்பாலும் பற்றாக்குறையுடன் கூடிய பட்ஜெட்டுகளையே, மாநில அரசுகள் போடுகின்றன.இந்த சூழ்நிலையில், வருமானத்தையும், நிதி ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் தாராளமாகச் செலவு செய்யும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. 13வது நிதிக் கமிஷன் இது தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்த பரிந்துரைகளுக்கு நேற்று டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல், உடனடியாக அமலுக்கு கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 2006-07ம் ஆண்டிலிருந்து மாநில அரசுகள் வாங்கிய கடன்கள் மற்றும் இந்த கடன்களை திரும்பிச் செலுத்தாமல் நிலுவையில் இருக்கும்போதே திரும்பவும், 2009-10ம் ஆண்டில் கடன் வாங்கியுள்ள மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தாக வேண்டும். 13வது நிதிக் கமிஷன் அளித்த ஆதாரங்களின்படி, மாநிலங்களுக்கு அளிக்கும் கடன் நிவாரணம் குறித்து பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து மாநில அரசுகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கடன்கள் அனைத்தும் 9 சதவீத வட்டியுடன் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில மாநிலங்கள் இந்த சதவீத வட்டியில் கடன் வாங்கிக் கொண்டு தாராளமாகச் செலவு செய்கின்றன; சில சமயங்களில் வீண் செலவுகளும் செய்கின்றன.
இந்நிலை நீடித்தால், சிறுசேமிப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கடனின் அர்த்தமே, மாறிவிடும். மேலும், தேசிய சிறுசேமிப்பு நிதியின் நிலைமையும் குறைந்து கொண்டே போகிறது. இதே நிலை தொடர்ந்தால், நாளடைவில் தேசிய சிறுசேமிப்பு ஆணையம் என்பதே மத்திய அரசுக்கு ஒரு சுமையாகிவிடும்.இந்தக் காரணங்களால், மாநில அரசுகளுக்கு ஒரு கடிவாளம் போட வேண்டும். நிதிச் செலவினங்களை தாராளமாகச் செய்யும் மாநில அரசுகளுக்கு இனிமேல் 9 சதவீத வட்டியுடன் கூடிய கடன் வழங்க வேண்டாம் என்றும், கூடுதல் வட்டி விதிக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்த பரிந்துரைகளை ஆராய்ந்த மத்திய அமைச்சரவை அதை ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது. இனிமேல் தாராளமாகச் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு, தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி 9 சதவீதம் என்பதை மாற்றியமைத்து 10.5 சதவீதம் வரை விதிக்கப்படும். இதற்கான ஒப்புதலை வழங்கியதோடு மட்டுமல்லாது, உடனடியாக அமல்படுத்தவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு: அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி அளவை 7 சதவீதம் அதிகரித்து வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 51 சதவீத அகவிலைப்படியை, 7 சதவீதம் அதிகரித்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதனால், மத்திய அரசுக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 228 கோடி ரூபாய் வரை செலவாகும்.
- நமது டில்லி நிருபர் -