பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி சுரேஷ் கல்மாடி மனு தாக்கல்
பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி சுரேஷ் கல்மாடி மனு தாக்கல்
பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி சுரேஷ் கல்மாடி மனு தாக்கல்

புதுடில்லி : 'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க, தன்னை அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கல்மாடி மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கேட்டு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று அவர் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணையின் போது, கல்மாடி தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது: பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு, லோக்சபா பொதுச் செயலர் விஸ்வநாதன் சார்பில் கல்மாடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதியான அவர், பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கேற்பது அவசியம். சமூகத்தின் மிக முக்கிய, அரசியல் ரீதியான பொறுப்பில் உள்ளவர் கல்மாடி.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, அவர் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை. பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம், தன் மீதான குற்றச்சாட்டில் தொடர்புடைய சாட்சிகளைக் கலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என்றோ, கோர்ட் விசாரணையை மீறுவார் என்றோ அர்த்தம் கொள்ளக்கூடாது. அவருக்கு பரோல் வழங்காவிட்டால், இந்திய அரசியல் சாசனப்படி, லோக்சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள, அவரின் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாக அர்த்தம். பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது, அவருக்குச் சொந்தமான வாகனத்தில் செல்லவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மனுவை விசாரித்த நீதிபதி தல்வாந்த் சிங், '' இதுதொடர்பாக, சி.பி.ஐ., திங்கள் கிழமைக்குள் (நாளை) பதிலளிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கேட்டு, லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு இம்மாத துவக்கத்தில், கல்மாடி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த மீராகுமார், 'சம்பந்தப்பட்ட கோர்ட் அனுமதி கொடுத்தால், லோக்சபா நடவடிக்கைகளில் கல்மாடி பங்கேற்கலாம்' என கூறியுள்ளார்.


