அசாமில் 171 போலி என்கவுன்டர்? விசாரணைக்கு கோர்ட் உத்தரவு!
அசாமில் 171 போலி என்கவுன்டர்? விசாரணைக்கு கோர்ட் உத்தரவு!
அசாமில் 171 போலி என்கவுன்டர்? விசாரணைக்கு கோர்ட் உத்தரவு!
ADDED : மே 29, 2025 12:52 AM

புதுடில்லி: அசாமில், 171 போலி என்கவுன்டர்கள் நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து, அசாம் மனித உரிமை கமிஷன் நியாயமான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, 2021ல் பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து 171 என்கவுன்டர்கள் நடந்துள்ளதாக, ஆரிப் யாசின் ஜவாடர் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இதில், 80 என்கவுன்டர்களில், 28 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இவை போலியான என்கவுன்டர்கள் என்றும், அவை குறித்து விரிவான விசாரணை கோரியும் அவர் தாக்கல் செய்த மனுவை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் 2023ல் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சூர்ய காந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இது மிகவும் தீவிரமான பிரச்னை. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதாக இது உள்ளது.
இதில் நடந்துள்ள உண்மைகள் தொடர்பாக, அசாம் மனித உரிமைகள் கமிஷன் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு விசாரிக்கும்போது தான், அவை போலியாக நடத்தப்பட்டவையா என்பது தெரியவரும். இந்த பொது விசாரணை தொடர்பாக பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.
விசாரணைக்கு முன்வரும் பாதிக்கப்பட்டோர், அவர்களுடைய குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுடைய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தீவிர விசாரணை தேவை என்றால், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் ஒத்துழைப்பை, கமிஷன் நாடலாம். இந்த விஷயத்தில் மாநில அரசும், போலீசும், முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.