ADDED : செப் 13, 2011 01:54 AM
பெருந்துறை: முன் விரோதம் காரணமாக, ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெருந்துறை தாலுகா எல்லீஸ்பேட்டை, செல்வ நகரைச் சேர்ந்தவர் குமரன் (43); பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். கருமாண்டிசெல்லிபாளையம் குழந்தைகள் பால்வாடி சத்துணவு கூட அமைப்பாளராக உள்ளவர் ஜெயா. சங்க வேலை சம்பந்தமாக குமரனை சந்தித்து பேசுவது உண்டு. இது ஜெயாவின் கணவர் கோபாலுக்கு பிடிக்கவில்லை. ஜெயாவை கண்டித்தார். ஆனாலும் குமரனும், ஜெயாவும் சங்க வேலை சம்பந்தமாக அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். கடந்த 2010 டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, எல்லீஸ்பேட்டையிலிருந்து வேலைக்கு பைக்கில் குமரன் வந்தார். பெருந்துறை அருகே உள்ள செங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அவரை வழிமறித்த கோபால், தன் மனைவி ஜெயாவுடன் பேசக் கூடாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபால், குமரன் மீது ஆசிட்டை வீசி விட்டு, தப்பி ஓடி விட்டார். இதில், குமரனின் முகம், கைகள் பலத்த சேதமடைந்தன. இது சம்பந்தமாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன், பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் கோபால் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, கோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.