யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை: மூங்கில் வளர்க்க ஏற்பாடு
யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை: மூங்கில் வளர்க்க ஏற்பாடு
யானைகளின் உணவு தேவைக்கு நடவடிக்கை: மூங்கில் வளர்க்க ஏற்பாடு
ADDED : ஜூலை 15, 2011 04:29 AM
கூடலூர்:முதுமலையில், யானை உள்ளிட்ட வன விலங்குகளின், எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 200 எக்டேர் பரப்பளவில், 500 கிலோ மூங்கில் விதைகளை வனத்துறையினர் விதைத்தனர்.யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள், நடவு செய்த, 40 ஆண்டுகளுக்கு பின், பூ பூத்து முழுமையாக அழிந்து விடுவது வழக்கம். நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவிலான, மூங்கில்களில் பூ பூத்து, அவை அரிசியாக மாறி உதிர்ந்து அழிந்து விட்டன. மூங்கில்கள் பெருமளவில் குறைந்து விட்டதால், யானைகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யானைகள், உணவுக்காக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதும், விவசாய நிலங்களில் புகுந்து, விளை பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. முதுமலை சுற்றுப்புறப் பகுதிகளில், சில பகுதிகளில் மட்டும், குறிப்பிட்ட அளவுக்கு மூங்கில்கள் உள்ளன. இந்த மூங்கிலும் குறைந்து விட்டால், எதிர்காலத்தில் உணவுக்காக, யானை - மனித மோதல்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.யானைகளின் எதிர்கால மூங்கில் தேவைக்கான பணிகளை, முதுமலை புலிகள் காப்பகம் மேற்கொண்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை சார்பில், 200 எக்டேர் பரப்பளவில், 500 கிலோ மூங்கில் விதைகள் (மூங்கில் நெல் ) விதைக்கப்பட்டுள்ளன. 'இவை 10 ஆண்டுகளில் ஓரளவு வளர்ச்சி பெற்று, யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்,' என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர்ஹாஜா கூறுகையில்,''மூங்கில் பெருமளவில் சாய்ந்து விட்டதால், எதிர் காலத்தில் யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய, முதுமலையில், மூங்கில் நெல்களை விதைக்கும் பணிகள், 200 எக்டேர் பரப்பில் நடந்துள்ளது. இதன் பரப்பு, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.அதேசமயம், அடுத்த சில ஆண்டுகள் வரை, தற்போதுள்ள வனவளம், யானைகள் உணவுக்கு போதுமானதா என்பது பற்றி தெரியவில்லை. அதே போல, யானைகள் உணவுக்காக வந்து செல்லும் பகுதிகளில், தோட்டம் அல்லது வன ஆக்கிரமிப்பு, எந்த அளவுக்கு சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.