துாத்துக்குடியில் ஹைட்ரஜன் ஆலைக்கு முதலீடு ரூ. 36,000 கோடி: 21ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் --
துாத்துக்குடியில் ஹைட்ரஜன் ஆலைக்கு முதலீடு ரூ. 36,000 கோடி: 21ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் --
துாத்துக்குடியில் ஹைட்ரஜன் ஆலைக்கு முதலீடு ரூ. 36,000 கோடி: 21ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் --
ADDED : ஆக 04, 2024 02:23 AM

சென்னை:துாத்துக்குடியில், 'செம்ப்கார்ப்' நிறுவனம், 36,000 கோடி ரூபாய் முதலீட்டில், பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 'டிட்டாகர் ரயில்' நிறுவனம், 1,850 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இவற்றின் கட்டுமான பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின், வரும் 21ல் அடிக்கல் நாட்டுகிறார். இதன் வாயிலாக, 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக அரசு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, இந்தாண்டு ஜனவரியில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இரு நாட்கள் நடந்த மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அவற்றில், பெரிய அளவில் முதலீடு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை 632.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க, தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தலைமைச் செயலர், முக்கிய துறைகளின் செயலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவின் முதல் கூட்டம், ஜூலை 10ல் நடந்தது. அதில், நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த, 'செம்ப்கார்ப்' நிறுவனம், துாத்துக்குடி மாவட்டத்தில், சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி, 36,238 கோடி ரூபாய் முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இதன் கட்டுமான பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் வரும் 21ல் அடிக்கல் நாட்டுகிறார்; இதன் வாயிலாக, 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்.
ரயில் சக்கரம்
ரயில் வேகன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ்' நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 1,850 கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் சக்கரம் தயாரிக்கும் ஆலை அமைக்க உள்ளது.
இதன் கட்டுமான பணிக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்; இந்த ஆலையால், 1,400 பேருக்கு வேலை கிடைக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், எல் அண்டு டி நிறுவனம் அதிநவீன, 'டேட்டா சென்டர்' அமைத்துள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், தமிழக அரசின் உயரதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.