ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிவகாசியை சுற்றி ரிங் ரோடு அமைக்க முயற்சி மேற்கொள்வேன், ''என,சிவகாசி நகராட்சி தலைவர் காங்., வேட்பாளர் அசோகன் கூறினார்.சிவகாசி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய துணைத்தலைவர் அசோகன் கூறியதாவது: மாவட்டத்தில் பல ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாட்டாலும் ,சிவகாசியில் ஐந்து ஆண்டுகளாக தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்தோம்.
கடந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உயர்த்தப்பட்ட வீட்டு குடிநீர் கட்டணத்தை மாதம் ரூ.100யை 60 ஆக குறைத்தோம். நவீன குப்பை பெட்டிகள் வைத்து, இயந்திரம் மூலமாக உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்பட்டன. 60 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த மருதுபாண்டியர், காத்தநாடார் தெரு ஓடைகள் தூர்வாரி, இருபுறமும் கான்கீரிட் சுவர் கட்டி மழைநீர், கழிவு நீர் தேங்காத வகையில் நவீன 'பேபிசேனல்' வாறுகால் வசதி செய்யப்பட்டது. நாடார் லாட்ஜ் பாலத்தில் இருந்து காத்தநாடார் ஓடை வழியாக நெரிசலை குறைக்கும் வகையில், புதிதாக போக்குவரத்து பாதை அமைத்து, புதுரோட்டு தெருவை சந்திக்கும் வகையில் ரோடு அமைக்கப்பட்டது. நகரின் முக்கிய 8 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. காமராஜர் ரோடு, அண்ணாதுரை ரோடு, அண்ணா மார்கெட் ரோடு, புதுரோட்டுதெரு , என்.ஆர்.கே.ஆர்., வீதி, பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த, மின் கம்பங்களை அகற்றி, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. எரிவாயு தகன மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரில் பல இடங்களில் சிமென்ட் 'பேவர் பிளாக்' பதிக்கப்பட்டது. காமராஜர் பூங்கா சீரமைப்பு செய்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. நகராட்சி தலைவராக வெற்றிபெற்றால் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வருவேன். பாதாள சாக்கடை திட்டத்தை 3 ஆண்டுகளில் உறுதியாக நிறைவேற்றுவேன். பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து, சிறுகுளம் கண்மாயில் தேக்கி, நகரில் நிலத்தடி நீர்மேலோங்க செய்வேன். நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிவகாசியை சுற்றி ரிங் ரோடு அமைக்க முயற்சி மேற்கொள்வேன், என்றார்.


