/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டுப்பாடு இல்லாமல் உரம் விவசாயிகள் எதிர்பார்ப்புதட்டுப்பாடு இல்லாமல் உரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
தட்டுப்பாடு இல்லாமல் உரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
தட்டுப்பாடு இல்லாமல் உரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
தட்டுப்பாடு இல்லாமல் உரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 27, 2011 11:50 PM
விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலும் வேளாண் பணி மற்றும் தொழில்கள் கழகம்(பாசிக் நிறுவனம்) துவக்கப்பட்டது.
ஆரம்பத்தில் விவசாயம் தொடர்பான பணிகளை மட்டுமே பாசிக் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் நல்ல முறையில் செய்து வந்தது. பின், பல்வேறு வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த துவங்கியது. தற்போது, விவசாயத்துக்கு சம்பந்தமே இல்லாத மதுக்கடைகளை ஆர்வத்துடன் நடத்தி வருகிறது. மேலும், ஆட்களை வேலைக்கு வைக்கும் நோக்கத்தில் துணிக் கடை திறந்து படுநஷ்டத்துடன் நடத்தி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயப் பணிகளில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாசிக் நிறுவனத்தின் டெப்போக்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரம், பூச்சி மருந்து போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேவைப்படும் உரங்கள், தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். கடந்த சொர்ணவாரி மற்றும் நவரை பருவத்தில் நெல் மற்றும் உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான உரங்களான டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ், அமோனியா போன்றவற்றுக்கும், பல்வேறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. பாசிக் டெப்போவில் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கிடைக்காததால் வெளிமார்க்கெட்டில் விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவலம் அரங்கேறியது. இதுபோன்ற சூழ்நிலையில், சம்பா பருவம் தற்போது துவங்கி உள்ளது. வயலை உழுது நடவு பணிகளை விவசாயிகள் சுறுசுறுப்புடன் துவக்கி விட்டனர். ஆனால், டி.ஏ.பி., யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை.
குறைந்த அளவு உரங்களே இருப்பு வைக்கப்படுவதால், உடனுக்குடன் தீர்ந்து விடுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக இந்தப் பருவத்திற்கு பொட்டாஷ் உரம் அவசியமாகும். நடவு நட்டு 15 நாட்களுக்குப் பிறகு களை எடுத்தவுடன் பொட்டாஷ் போடுவார்கள். ஆனால் பொட்டாஷ் உரத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இன்னொரு பக்கம் விளைநிலங்கள் படுவேகமாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு சாகுபடி பருவத்திலும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து வகை உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துக்களையும் தேவையான அளவிற்கு இருப்பு வைத்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது சிறப்பு நிருபர்