
கவர்னரிடம் புகார் மனு அளிக்க தி.மு.க., திட்டம்! ''கூட்டுறவுத் துறையில நடந்த முறைகேடுகளை தோண்ட ஆரம்பிச்சிட்டாங்க வே...!'' என, பேசியபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''தி.மு.க., ஆட்சியில, கூட்டுறவுத் துறையில ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்காம் வே...
''இந்த தகவலை கேள்விப்பட்டதுல இருந்து, நீலகிரி மாவட்ட தி.மு.க.,வினர் ஆடிப் போயிருக்காவ... ஏன்னா, இந்த மாவட்டத்துல தேர்தல் நெருக்கத்துல, 36 பேரை, பல பதவிகள்ல நியமனம் செய்திருக்காவ... சீனியாரிட்டி எதையும் பார்க்காம, அவங்க நினைச்சவங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 'இன்டர்வியூ' கார்டு அனுப்பி, பணி நியமனம் செய்தாங்க... பாதிக்கப்பட்டவங்க, இந்த விவரங்களை எல்லாம் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிருக்காங்க வே...'' என விளக்கினார் அண்ணாச்சி.
''புது கவர்னரிடம் புகார் மனு கொடுக்க திட்டமிட்டுருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.
''தி.மு.க.,வினரா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''ஆமாம் பா... புது கவர்னர் பதவியேற்பு விழா அழைப்பிதழ், தி.மு.க., தலைவருக்கும் போயிருக்கு... ஆனா, அவர் விழாவுல கலந்துக்காம, வேறொரு நாள் தனியா போய் கவர்னரை சந்திச்சாரு... அப்ப, 'நில மோசடி விவகாரத்துல வேணும்னே, தி.மு.க.,வினர் மேல ஆளுங்கட்சி பொய் வழக்கு போடுதுன்னு, கவர்னர்கிட்ட புகார் மனு கொடுக்கலாம்'னு, மாஜி மந்திரி ஒருத்தர், கருணாநிதிகிட்ட சொல்லிருக்காரு...
''அதுக்கு, 'முதல் சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பா இருக்கட்டும்... அடுத்த முறை வரும்போது பார்த்துக்கலாம்'னு, கருணாநிதி சொல்லிருக்காரு பா... அதனால, சீக்கிரமே கவர்னரை சந்திச்சு, ஆளுங்கட்சி மேல புகார் மனு கொடுப்பாங்கன்னு பேசிக்கறாங்க...'' என்றார் அன்வர்பாய்.
''உளவுப்பிரிவு போலீசாருக்கு வித்தியாசமான, 'அசைன்மென்ட்' கொடுத்திருக்கா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு தாவினார் குப்பண்ணா.
''என்னன்னு நீங்களே சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ரேஷன் கடையில இலவச அரிசி மற்றும் சலுகை விலையில பல்வேறு மளிகைப் பொருட்களை தமிழக அரசு வழங்கிண்டு இருக்கு ஓய்... இதை, மக்கள் எந்த அளவுக்கு பயன்படுத்தறா... பொருட்களை சரியான எடையில, மக்களுக்கு வழங்கறாளான்னு, 'செக்' பண்ணச் சொல்லி, உத்தரவு வந்திருக்காம்...
''ரேஷன் கடையில இருந்து கொஞ்சம் தள்ளி இருந்து, பொருட்களை வாங்கிண்டு வர்றவாகிட்ட விசாரிச்சு, பொருட்களை தனியார் கடையில எடை போட்டுப் பார்ப்பாளாம்... எடை குறைவு மற்றும் வேறு முறைகேடுகள் இருந்தா, அந்த கடைகளைப் பத்தி அரசுக்கு, 'ரிப்போர்ட்' அனுப்புவாளாம் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா; பெரியவர்களும் கிளம்பினர்.


