Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி

இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி

இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி

இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில், நேற்று முன் தினம், அரசு விரைவு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

செங்கல்பட்டு அடுத்த அமணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன், 76. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர், 2003ம் ஆண்டு, அக்., மாதம் 12ம் தேதி காலை 11.30 மணிக்கு, செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் நடந்து சென்றார். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற, அரசு விரைவு பஸ், அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, செங்கல்பட்டு சப்-கோர்ட்டில், வக்கீல் கனகராஜ் மூலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 400 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென, 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து, போக்குவரத்துக் கழக நிர்வாகம், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.



அதை விசாரித்த ஐகோர்ட், 98 ஆயிரத்து 400 ரூபாய் வழங்கும்படி, 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகும், இழப்பீட்டுத்தொகை, காலதாமத வட்டி ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டிய, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 998 ரூபாய் வழங்கப்படவில்லை. எனவே, பஸ்சை ஜப்தி செய்யக் கோரி, செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்யும்படி, கடந்த மாதம் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று முன் தினம் காலை 11.30 மணிக்கு, செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் சுங்கசாவடிக்கு சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கு வந்த சென்னை - தஞ்சாவூர் அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்தனர். அதில் வந்த பயணிகள், வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சை கோர்ட்டிற்கு கொண்டு சென்றதும், சுப்பராயனிடம் ஒப்படைத்தனர்.



மற்றொரு வழக்கு: வந்தவாசி அடுத்த நங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த காளி மகன் மகேந்திரன், 24. சோத்துப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையில் பணிபுரிந்தார். 1995 ம் ஆண்டு பகல் 1.30 மணிக்கு, சைக்கிளில், சாலையோரம் சென்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற, அரசு விரைவு பஸ், மோதியதில், அவர் இறந்தார். அவரது பெற்றோர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, 2000ம் ஆண்டு, மதுராந்தகம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, 2007 ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இழப்பீடுத்தொகை மற்றும் காலதாமத வட்டி ஆகியவை சேர்த்து, 2 லட்சத்து 23 ஆயிரம் வழங்கப்படவில்லை. எனவே, பஸ்சை ஜப்தி செய்ய, அதே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி தருமன், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய, கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார். நேற்று முன் தினம், பகல் 12.30 மணிக்கு, மதுராந்தகம் பை-பாஸ் சாலைக்கு சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கு வந்த சென்னை - மதுரை அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்து, காளியிடம் ஒப்படைத்தனர். பயணிகள், வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us