"மின்வெட்டு' கலங்கி நிற்கும் அ.தி.மு.க., வேட்பாளர்கள்
"மின்வெட்டு' கலங்கி நிற்கும் அ.தி.மு.க., வேட்பாளர்கள்
"மின்வெட்டு' கலங்கி நிற்கும் அ.தி.மு.க., வேட்பாளர்கள்
ADDED : அக் 03, 2011 12:12 AM
வத்திராயிருப்பு: தேர்தல் நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் விவசாயமும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழையின்றியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பம்புசெட்டுகளையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், கட்சி வேட்பாளைர்களுக்கு ஏற்கனவே சின்னம் உள்ளதால் மனு பரிசீலனை முடிந்தவுடன், ஓட்டு சேகரிப்பில் ஈடுபடத்துவங்கி விட்டனர். ஓட்டு கேட்டு செல்லும்போது, பொதுமக்கள் மின்வெட்டு பிரச்னையால் 'முகம்சுளிப்பதால்' அதை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.
'இப்போது தானே ஆட்சிக்கு வந்துள்ளோம், ஐந்து வருடமாக நீடித்த பிரச்சனையை ஐந்து நாட்களில் தீர்க்க முடியுமா? இன்னும் ஓரிரு மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்துவிடுவோம்,' என நீண்ட விளக்கம் கொடுத்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வினர் விளக்கம் கொடுத்தாலும் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை இழந்ததற்கு மின்வெட்டு ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்ததை நினைத்து, உள்ளுக்குள் ஒருவித பயத்துடனேயே உள்ளனர். இப்பிரச்னை தேர்தலுக்கு முன் முடிவுக்கு வராதா என்ற ஏக்கத்தை அ.தி.மு.க., வேட்பாளர்களிடம் வெளிப்படையாகவே காணமுடிகிறது.


