"அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத வள்ளுவர்'
"அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத வள்ளுவர்'
"அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத வள்ளுவர்'
ADDED : செப் 27, 2011 11:40 PM
சென்னை: '' தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவர், தன்னால் மற்றவர்கள் செய்திகளை அறிந்து கொள்ள நினைத்தவர்,'' என்று இசைக்கவி ரமணன் தெரிவித்தார். 'திருக்குறள் இருக்க குறையொன்றுமில்லை' என்னும் தலைப்பில், திருக்குறள் பற்றிய சிறப்புரை, கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில், சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று நடந்தது.
இதில், இசைக்கவி ரமணன் ஆற்றிய சிறப்புரை: உலகில் உள்ள அனைவருக்கும் வழிகாட்ட திருக்குறள் துணையாக உள்ளது. திருக்குறளுக்கு, 'வசதி, ஆழம், தெளிவு, விரிவு, அழகு என்னும் ஐந்து அம்சங்களை கொண்டது' என, பாரதி கூறியுள்ளார். பத்து அறிஞர்கள் உரை எழுதிய திருக்குறளுக்கு,தெய்வநூல், பால்முறை, முதுமொழி, பொருள்முறை உள்ளிட்ட 19 பெயர்கள் உள்ளன. உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்நூலை, நமக்கு பல முன்னோர்கள் பாதுகாத்து தந்தது தியாகம். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத வள்ளுவர், தன்னால் மற்றவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளட்டும் என நினைத்துள்ளார், இதனால் தான், தன்னைப் பற்றிய சிறு குறிப்பும் எந்த குறளிலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். திருக்குறளின் முதல் குறள், 'அ' எனும் முதல் எழுத்தில் தொடங்கி, 'ன்' எனும் இறுதி எழுத்தில், 1,330வது இறுதி குறளில் முடிகிறது. நமக்கெல்லாம் சொந்தமான திருக்குறள், வேதத்திற்கு ஒப்பாகவும், வேதத்திற்கு அப்பாலும் சிறப்புடையது. இத்தகைய சிறப்புடைய குறள், 38 அதிகாரங்களில் அறத்துப்பால், 70 அதிகாரங்களில் பொருட்பால், 25 அதிகாரங்களில் காமத்துப்பால் என்று 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலை கதை, கவிதை, இதிகாசம், சூத்திரம் உள்ளிட்ட எந்த பகுதியிலும் சேர்க்க முடியாததாக அமைந்துள்ளது. ஒரு செயலை மற்றொரு செயலால் தான் முடிக்க முடியும் எனக் கூறும் திருக்குறளுக்கு, திருக்குறள் தான் அகராதி. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என, உலகப் புகழ் தந்த வள்ளுவர், கட்டுக்குள் அடங்காத கடவுள். இவ்வாறு இசைக்கவி ரமணன் கூறினார். இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் பாலசந்தர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


