Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்

திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்

திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்

திருச்சி வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி:தொடர் முற்றுகையில் அ.தி.மு.க.,வினர்

ADDED : அக் 02, 2011 12:47 AM


Google News

திருச்சி: உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்துள்ள அ.தி.மு.க.,வினரின் தொடர் முற்றுகையால், திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை உடனடியாக வெளியிட முடியாத நிலையில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திணறியபோது, அ.தி.மு.க., மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர் வரை, அதிரடியாக பட்டியல் வெளியிட்டது.



திருச்சி, அ.தி.மு.க.,வில் அதிருப்தியாளர்கள் கொதிப்பு அதிகமாக இருக்கிறது.

அந்தநல்லூர் ஒன்றியம் 15வது வார்டு கவுன்சிலர் அறிவிப்புக்கு முன்பே, மாநகர் மாவட்ட செயலர் மனோகரன் அலுவலகம், முற்றுகையிடப்பட்டது.அறிவிப்புக்கு பின் அதிருப்தி அடைந்த உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, அ.தி.மு.க.,வினர், எப்படி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கலாம்? என்று உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கின்றனர்.



திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு மிகக்கடுமையாக இருக்கிறது. செப்., 30ம் தேதி இரவே, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரனின் வீட்டில் கல்வீசி, எதிர்ப்பை கட்சியினர் துவக்கி வைத்தனர்.நேற்று முன்தினம், 4வது வார்டு வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீரங்கம் பகுதிச்செயலர் திருப்பதி தலைமையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டனர்.

அதன்பின், உள்ளூர் அமைச்சர் சிவபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிருப்தியாளர்களின் அதிரடி போராட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன.

ஸ்ரீரங்கம் பகுதி, 1, 4, 9, 10 மற்றும் 13, 14, 40, 52, 53, 54வது வார்டுகளை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாநகர் மாவட்டச்செயலர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினர்.



'தலைமை அறிவித்ததாகக் கூறி, மாவட்டச்செயலர் பரிந்துரை செய்த, அவரது ஆதரவாளர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாற்றி, உண்மையான தொண்டர்களை வேட்பாளராக தலைமை அறிவிக்கவேண்டும்' என்று கோஷம் எழுப்பினர்.அ.தி.மு.க.,வினர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'இன்றும் போராட்டம் தொடரும்' என்று அதிருப்தியாளர்கள் அறிவித்திருப்பதால், திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் அமைச்சருமான சிவபதி, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன் ஆகியோர் கிலியில் உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us