Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"டாஸ்மாக்' மதுக்கடைகளில் மதுபானம் விற்பனையில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

"டாஸ்மாக்' மதுக்கடைகளில் மதுபானம் விற்பனையில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

"டாஸ்மாக்' மதுக்கடைகளில் மதுபானம் விற்பனையில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

"டாஸ்மாக்' மதுக்கடைகளில் மதுபானம் விற்பனையில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்

ADDED : ஆக 14, 2011 10:26 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அப்போது, ஊழியர்கள் ஈடுபட்டுள்ள பல்வேறு முறைகேடு கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுத்தால், ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், 'டாஸ்மாக்' அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தமிழகத்தில் மதுபானம் விற்பனையில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. மாதந்தோறும் 68 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை, மதுபான விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை நாட்கள் மற்றும் தேர்தல் சமயங்களில், மதுபான விற்பனை 75 கோடி ரூபாயை தொடுகிறது. மாதந்தோறும் எட்டு கோடி ரூபாய் வரை, பீர் விற்பனை இருக்கிறது; கோடையில் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திருப்பூர், அவிநாசி, காங்கயம், தாராபுரம் என மாவட்ட முழுவதும் 250 மதுபான கடைகள் உள்ளன. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சரக்கு விற்பனை அமோகமாக இருக்கிறது. மூன்று கோடி ரூபாயை விற்பனை தாண்டுகிறது. ஊரக பகுதிகளை தவிர்த்து, நகர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மதுக்கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தும் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபடும் 'டாஸ்மாக்' ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். சமீபத்தில், காங்கயம் படியூரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியபோது, அங்கிருந்த மதுக்கடையில் பேனா நிப்பிளை பயன்படுத்தி, மூடியை திறந்து, மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்ற இருவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பெரியார் காலனி பகுதியில், மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்ற கடை மேற்பார்வையாளர் உட்பட மூன்று ஊழியர்கள் 'சஸ்பென்ட்' செய்யப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுக்கடைகளில் நடக்கும் முறைகேடு குறித்து, தொடர்ந்து 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு புகார் வருகிறது. மதுவில் தண்ணீர் கலந்து விற்பது; சரக்குகளை கூடுதல் விலைக்கு விற்பது; 'குடி'மகன்கள் விரும்பும் சரக்குகளை பதுக்கி வைத்து, இருப்பில் உள்ள சரக்குகளை விற்பது; பீர் குளிர்ச்சியாக இருக்க, கூடுதல் விலை கேட்பது; கடை மூடிய பின்பும், பின்புற பகுதியில் வைத்து சரக்குகளை 'டாஸ்மாக்' ஊழியர்களே விற்பது. அரசு விடுமுறை நாட்களில், 'பினாமி' மூலம் அதிக சரக்குகளை முன்கூட்டியே விற்று, விடுமுறையன்று அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பது என பல்வேறு முறைகேடுகளில், அவர்கள் ஈடுபடுவது அதிகாரிகளின் ஆய்வின்போது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தால், நிர்வாகம் ஸ்தம்பிக்கும். ஊழியர் பற்றாக்குறை ஏற்படும்; கடைகளில் போதிய ஆட்கள் இல்லாமல், மதுபான விற்பனை பாதிக்கப்படும் என்பதால், ஊழியர்களை எச்சரித்தும், கண்டித்தும், தவறு செய்யாதபடி பணியாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 'டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுபான விற்பனையில் தவறு நடப்பது குறித்து ஆய்வில் தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல கடைகளிலும் இத்தவறு உள்ளதால், 90க்கும் மேற்பட்டவர்களை 'சஸ்பெண்ட்' செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்பின், ஊழியர் பற்றாக்குறையால் மதுபான விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என தெரியவந்ததால், அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். அடுத்த முறை அவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது உறுதியானால், கடும் நடவடிக்கை இருக்கும்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us