கலைஞர் "டிவி'யுடன் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்பு: 5 கம்பெனிகளின் சொத்துக்கள் பறிமுதல்
கலைஞர் "டிவி'யுடன் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்பு: 5 கம்பெனிகளின் சொத்துக்கள் பறிமுதல்
கலைஞர் "டிவி'யுடன் நடந்த பண பரிமாற்றத்தில் தொடர்பு: 5 கம்பெனிகளின் சொத்துக்கள் பறிமுதல்
ADDED : ஆக 31, 2011 01:15 AM

புதுடில்லி :ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் 'டிவி'யுடன் நடந்த பணப் பரிமாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து நிறுவனங்களின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும், நேற்று அமலாக்கத் துறை உத்தரவு பிறப்பித்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற, டி.பி., ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கைமாறாக, டி.பி.,ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம், குசிகான் பழ நிறுவனம் வழியாக, கலைஞர் 'டிவி'க்கு 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் 'டிவி' நிறுவனத்தில் சோதனை நடத்தியது. வரி ஏய்ப்பு செய்து, சட்ட விரோத பண மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் முதல், கலைஞர் 'டிவி' வரையில் நடந்த பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய டைனமிக் ரியாலிட்டி, கேன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டி.பி., ரியாலிட்டி ஆகிய ஐந்து நிறுவனங்களின் அசைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக் கணக்குளை முடக்கவும் அமலாக்கத்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புப் சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. '2ஜி' ஊழல் வழக்கில், இதில் சம்பந்தப்பட்டுள்ள கம்பெனிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது இது முதல் முறை. இதைத்தொடர்ந்து, மேலும் சில தொலைத்தொடர்பு கம்பெனிகள் மற்றும் தனிநபர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவது தொடரும் என, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


