Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டியூகாஸ் நிறுவனத்தில் ரூ.3.78 கோடி லாபம்

டியூகாஸ் நிறுவனத்தில் ரூ.3.78 கோடி லாபம்

டியூகாஸ் நிறுவனத்தில் ரூ.3.78 கோடி லாபம்

டியூகாஸ் நிறுவனத்தில் ரூ.3.78 கோடி லாபம்

ADDED : செப் 01, 2011 01:54 AM


Google News
துடியலூர் : துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) நடப்பாண்டு உத்தேசமாக 3 கோடியே 78 லட்ச ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக, மகாசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.துடியலூர் டியூகாஸ் நிறுவன மகாசபை கூட்ட நடவடிக்கை குறித்து இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் துரைசாமி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:இந்நிறுவனம் கடந்த 55 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது.

தொடர்ந்து 11 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவு வார விழாக்களில் சிறந்த சங்கத்துக்கான தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2008-09 ஆண்டுகளில் 3.68 கோடி ரூபாயும், 2009-10 ஆண்டுகளில் 3.48 கோடி ரூபாயும், 2010-11 ஆண்டுகளில் 3.78 கோடி ரூபாயும் லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியில் நிதி இருப்பாக 130 கோடி ரூபாய் உள்ளது. 121 கோடி ரூபாய்க்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 27.20 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் நிதி நிலைமை நல்லமுறையில் உள்ளது. விதைகளை பதப்படுத்துவதற்கான புதிய இயந்திரத்தை வாங்க, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வங்கியை நவீனப்படுத்த புதிய மென்பொருள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணைய தளத்தின் வாயிலாக அனைத்து 'ஏ' வகுப்பு உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கும் வகையில், இது வடிவமைக்கப்பட்டு இருக்கும். விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய மண்புழு உரம், பசுமை குடில், திரவ வகை உரங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியவை நல்ல தரத்துடன் கொள்முதல் செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, வங்கி கிளைகள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. சொந்தக் கட்டடத்தில் செயல்படும் வகையில் இடம், கட்டடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செயல் எல்லையில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி கடனை உயர்த்தி, வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்.பி.ஜி., ஏஜன்சி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பணியாளர்களுக்கு ஆளுமை திறனை வளர்க்க உரிய பயிற்சி வழங்கப்படும். நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்களை பழுது பார்த்தல், புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டியூகாஸ் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் பெட்ரோல் பங்கில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயம் தொடர்பான பணிகள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் பி.பி.ஒ., அலுவலகம் அமைத்து, வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பினர்களின் பங்கு ஈவுத் தொகையை டிபாசிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து ஸ்தாபன செயல் எல்லையில் உள்ள அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12வது வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்படும். நிறுவனத்தின் பொதுநல நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். நிறுவன 'ஏ' வகுப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us