கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் 9 கேள்விகள்!
கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் 9 கேள்விகள்!
கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் 9 கேள்விகள்!

பெங்களூரு: ஆர்.சி.பி., கிரிக்கெட் அணியின் வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் கர்நாடக உயர் நீதிமன்றம், அரசுக்கு சரமாரியாக ஒன்பது கேள்விகளை எழுப்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 4ம் தேதி, ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. மைதானத்தின் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து 5ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது.
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி அளித்த பதிலை கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மருத்துவ வசதி
இந்நிலையில் விசாரணையின்போது, ஒன்பது கேள்விகளை அரசு தரப்புக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியது.
அதன் விபரம்:
1வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்தது யார்? எப்போது? நிகழ்ச்சி நடத்துவது பற்றி முறைப்படுத்தப்பட்டது எப்படி?
2போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
3கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
4மருத்துவம் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன?
5மக்கள் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?
6காயம் அடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் மருத்துவ நிபுணர்கள் உரிய சிகிச்சை அளித்தனரா? இல்லையென்றால் ஏன் அளிக்கப்படவில்லை?
7காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது?
8இதுபோன்ற கொண்டாட்டங்களில், 50,000க்கும் மேற்பட்டோர் கூடினால், கூட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் வழிகாட்டுதல் வகுக்கப்பட்டு உள்ளதா?
9நிகழ்ச்சி நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது?
மேற்கண்ட, ஒன்பது கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இவற்றுக்கு உரிய பதில்களை அறிக்கையாக, 10ம் தேதி நடக்கும் விசாரணையின்போது, அரசு தரப்பு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
ராஜினாமா
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியது.
சுபன்விதா எஸ்.பி., தலைமையில் நேற்று முதல் விசாரணை துவங்கியது. அதிகாரிகள் குழு, சின்னசாமி மைதானத்திற்கு சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட நுழைவாயில் பகுதியில் ஆய்வு செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ., நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யு, ஊழியர்கள் கிரண், சுமந்த் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், சி.ஐ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.