Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்திய 117 பேருக்கு," குண்டாஸ்'

ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்திய 117 பேருக்கு," குண்டாஸ்'

ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்திய 117 பேருக்கு," குண்டாஸ்'

ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்திய 117 பேருக்கு," குண்டாஸ்'

ADDED : அக் 06, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

தமிழகம் முழுவதும் கடந்த நான்கரை மாதங்களில் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களை கடத்திய 117 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.



தமிழகம் முழுவதும் தற்போது 1.83 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர, வறுமைக் கோட்டிற்குக் கீழ், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் 20 லட்சம் அந்தியோஜனா கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான அரிசி, வெளியில் பணம் கொடுத்து வாங்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. இதனால், அரசிற்கு பலஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் நன்மை கருதி, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் ஆகியவை, சில சமூக விரோதிகளால் கடத்தப்பட்டும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இது இன்று நேற்றல்ல; பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேசன் கடைகளில் இருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்தோ, ரேசனில் பொருட்கள் வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தோ, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுகிறது. ரேசன் அரிசியை பொறுத்தவரை, சேகரித்த பின், அதனை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதுடன், வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் கடத்தினர்.



ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை தடுத்து, கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட நிலையில், கடத்தல் காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, கள்ள மார்க்கெட்டில் ரேசன் பொருட்களை விற்பனை செய்வோரை வேட்டையாடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் முக்கிய எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோந்துப்படைகளின் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டன.இதையடுத்து, ரேசன் அரிசி கடத்தல் சிறிது சிறிதாக குறையத் துவங்கியது. கடந்த நான்கரை மாதத்தில் மட்டும் ரேசன் அரிசி, மண்ணெண்ணெய், சிலிண்டர் கடத்தியதாக 4907 வழக்குகள் பதியப்பட்டு, 2,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பல முறை கடத்தலில் தெடார்புடையவர்கள் என, 114 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், லாரி மூலம் அரிசி கடத்திய திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர், 35, விருதுநகரøச் சேர்ந்த ராஜேந்திரன் , 44, கடலூர் மாவட்டம் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த கொளஞ்சி, 48, தருமபுரியைச் சேர்ந்த சாமிக்கண்ணு, 51, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீசன், 39, வினோத், 44 மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி, 31 ஆகிய ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.



இவர்களிடம் இருந்து, 925.5 குவிண்டால் அரிசி மற்றும் மூன்று லாரி மற்றும் ஒரு வேன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், தண்டனை முடிந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருவதால், இதனை தடுக்கும் விதமாக தற்போது, கைதானவர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும், கடத்தலில் ஈடுபடுவோர், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.



- கி.கணேஷ்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us