Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூருக்கு வந்தடைந்த அமராவதி தண்ணீர் :மழையும் அதிகம் பெய்ததால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி

கரூருக்கு வந்தடைந்த அமராவதி தண்ணீர் :மழையும் அதிகம் பெய்ததால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி

கரூருக்கு வந்தடைந்த அமராவதி தண்ணீர் :மழையும் அதிகம் பெய்ததால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி

கரூருக்கு வந்தடைந்த அமராவதி தண்ணீர் :மழையும் அதிகம் பெய்ததால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி

ADDED : செப் 09, 2011 02:02 AM


Google News
கரூர்: அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன் தினம் கரூர் மாவட்டத்தை தொட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரியை விட அதிகளவில் மழை பெய்துள்ளதால் கரூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணை மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான நிலங்களில் விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான சின்னாறு மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. சராசரியாக நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 459 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 90 அடி கொண்ட அமராவதி அணையில் தற்போது 59.42 அடி தண்ணீர் உள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2ம் தேதி முதல் அமராவதி ஆற்றில் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் கரூர் மாவட்ட எல்லையான செட்டிப்பாளையத்துக்கு அமராவதி தண்ணீர் வந்து சேர்ந்தது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. குறிப்பாக அரவக்குறிச்சி பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, சோளம், கம்பு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அமராவதி ஆற்று நீரை நம்பியிருந்த கரூர் மாவட்ட விவசாயிகள், பணப்பயிர்களை சாகுபடி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 652.20 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மேற்கு பருவமழை மூலம் (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை) 238.40 மி.மீ., மழையும், வடகிழக்கு பருவமழை மூலம் (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) 287 மி.மீ., மழையும் மொத்தமாக ஆண்டுக்கு 525.90 மி.மீ., மழை சராசரியாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை எட்டு மாதங்களில் சராசரியை விட ஒரு மி.மீ., மழை அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மழை இல்லை. பிப்ரவரியில் 2.49, மார்ச்சில் 4.3 மழை பதிவானது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரி மழையளவு 34.50. ஆனால் 105.31 மி.மீட்டர் மழை பெய்தது. மே மாதத்தில் 35.70, ஜூன் மாதத்தில் 8.93, ஜூலை மாதத்தில் 1.16 மழை இருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரி மழையளவான 54.40 தாண்டி 90.09 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கரூர் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவான 248.7 மி.மீ., விட அதிகமாக இதுவரை 249.74 மி.மீ., மழை பெய்துள்ளது. இது எட்டு மாத சராசரி மழையளவை விட 1.67 மி.மீ., அதிகமாகும். நடப்பு செப்டம்பர் மாதம் தென்மேற்கு பருவ மழை மேலும் பெய்ய வாய்ப்புள்ளதால், மழையளவு அதிகமாகும்.

நடப்பாண்டு வரும் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழையும் அதிகளவில் கைகொடுக்கும் என்பதால், 'கரூர் மாவட்டத்துக்கு எதிர்பார்க்கப்படும் ஆண்டு சராசரி மழையளவை விட, அதிகமாக மழை பெய்ய வாய்ப்புண்டு.

இதனால் கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உயரும் என்பதால் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பணப்பயிர்களை சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us