இட்லி, சாம்பாரை ருசித்துச் சாப்பிட்டார் ஜனாதிபதி பிரதிபா
இட்லி, சாம்பாரை ருசித்துச் சாப்பிட்டார் ஜனாதிபதி பிரதிபா
இட்லி, சாம்பாரை ருசித்துச் சாப்பிட்டார் ஜனாதிபதி பிரதிபா
ADDED : ஆக 31, 2011 11:46 PM

கொல்லம் : மூன்று நாள் பயணமாக, கேரளா வந்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தான் தங்கியிருந்த ஓட்டலில், இட்லி சாம்பார், இடியாப்பம் தேங்காய் பாலுடன் ருசித்து சாப்பிட்டார்.
கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 30ம் தேதி மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் விமானம் மூலம், கொல்லம் ஆஸ்ரமம் மைதானத்தில் வந்திறங்கினார். அங்கு அவர் 'தி ராவீஸ்' ஓட்டலில் தங்கினார். மறுநாள் காலை கோட்டயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மாலையில் கொல்லம் அஷ்டமுடி உப்பங்கழியில் நடந்த 'ஜனாதிபதி கோப்பை'க்கான படகுப் போட்டியை துவக்கி வைத்தார். கொல்லத்தில் அவர் தங்கியிருந்த ஓட்டலில், இரு நாட்களிலும் காலையில் இடியாப்பம் தேங்காய் பால், இட்லி சாம்பார் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். பிற்பகல் உணவாக சாதம், சப்பாத்தி, மோர்க்குழம்பு, புடலங்காய் கூட்டு, வாழைப்பூ பொறியல் விரும்பி சாப்பிட்டார். இரவு உணவின்போது, சாதம், சப்பாத்தி, பச்சை காய்கறியிலான குருமா ஆகியவற்றையும் ருசித்து சாப்பிட்டார். மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த கலை நிகழ்ச்சிகளில் கதகளி, மோகினியாட்டம், களறி சண்டை ஆகியவற்றை ஜனாதிபதி விரும்பி பார்த்தார். தினமும் காலையில் சிறிது தூரம் நடை பழக்கம் உள்ள ஜனாதிபதி ஓட்டலை விட்டு வெளியே செல்லாமல், தங்கியிருந்த அறையிலேயே டிரெட்மில்லில் பயிற்சி எடுத்துக் கொண்டார். நேற்று காலை அவர் திருவனந்தபுரம் சென்றார். அங்கு கனகக்குன்னு அரண்மனையில் நடந்த, இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழக மண்டல அலுவலகத்திற்கான, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். மூன்று நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிற்பகல் தனி விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டார்.
ஹெலிகாப்டரில் திடீர் பழுது :ஜனாதிபதி தன் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக திருவனந்தபுரம் கனகக்குன்னு அரண்மனையில் நடக்கவிருந்த, இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பங்கேற்க நேற்று காலை 10.10 மணிக்கு, கொல்லம் ஆஸ்ரமம் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் விமானத்தில் ஏறினார். அதில் அவருடன் மாநில அமைச்சர் திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணனும், பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். ஜனாதிபதி ஏறி அமர்ந்த பிறகு, காலை 10.15 மணிக்கு ஹெலிகாப்டரின் விசிறிகளை இயக்க விமானி முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வலது பகுதியில் இருந்து லேசாக புகை வருவது தெரிந்தது. அதை பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஜனாதிபதி கார் மூலம் திருவனந்தபுரம் செல்ல ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் செல்வதற்காக, அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டரில் ஜனாதிபதி ஏறி, காலை 10.45 மணிக்கு தனது பயணத்தை தொடர்ந்தார்.ஹெலிகாப்டரில் இருந்த 'ஏசி' கருவி பழுதடைந்து அதனால் புகை வெளியேறி இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.