Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு

கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு

கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு

கூடங்குளத்தில் தொடரும் போராட்டம் உளவுத்துறை அதிகாரி சிறைபிடிப்பு 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாதிப்பு

ADDED : செப் 19, 2011 12:01 AM


Google News

திருநெல்வேலி : கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் மேலும் வலுக்கிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் 1988ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. அப்போதும் கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமத்தினர் இப்போது போலவே கடுமையான போராட்டத்தை துவக்கினர். இருப்பினும் வேலை வாய்ப்புகள் உருவாகும், சும்மா கிடக்கும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் அவ்வப்போது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன. ராதாபுரம் சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக இருந்த அப்பாவு முதலில் எதிர்த்தார். அவரே பின்னர் தி.மு.க.,எம்.எல்.ஏ.,ஆனபிறகு ஆதரித்தார். அரசியல் நிலை காரணமாக சிலர் ஆதரவும் பிறகு எதிர்ப்பும் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் பிகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட பாதிப்பினாலும் சில தினங்களுக்கு முன்பு பிரான்சில் ஏற்பட்ட அணுஉலை பாதிப்பினாலும்தான் அணுஉலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இடிந்தகரை லூர்து அன்னை ஆலய முன்பாக நடந்துவரும் உண்ணாவிரதத்தில் நேற்று 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சாரை சாரையாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

போராட்டம் தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த அறிக்கை பொதுமக்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நேற்றும் 8வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். நேற்று பங்கேற்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பெரிய அளவில் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. உளவு அதிகாரி சிறைபிடிப்பு: உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் அரசு அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். கடந்த 8 தினங்களாகவே போலீசார் யாரும் இடிந்தகரைக்குள் அனுமதிக்கப்படவில்லை. உளவுத்துறை அதிகாரிகள் வந்தாலும் அவர்களை கண்டுபிடித்து கெரோ செய்கின்றனர். நேற்று நெல்லையில் இருந்து வந்த எஸ்.பி.சி.ஐ.டி.,உளவுத்துறை இன்ஸ்பெக்டரை பெண்கள் மறித்து கெரோ செய்தனர். அவரது சட்டையை பிடித்து இழுத்தபடி உண்ணாவிரத பந்தலுக்கு கொண்டுசென்றனர். உண்ணாவிரதத்தில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபடுவது 'சிலர்' என அரசுக்கு தகவல் தெரிவிக்கும் இவரை விடக்கூடாது என கோஷமிட்டனர். இருப்பினும் போராட்டக்குழுவினர் அவரை ஆலயத்திற்குள் அழைத்துச்சென்றுவிடுவித்தனர்.



கவலைக்கிடம்: செப்.,11 முதல் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களில் சுமார் 20 பேர் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று விஜயகாந்த் மேடையில் இருந்தபோதும் ஒரு பெண் மயக்கமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.



தொடரும் போராட்டம்: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூடங்குளத்திற்கு எதிரான போராட்டத்தை கன்னியாகுமரியிலும் பொதுமக்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதுகுறித்து போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை துவக்கியுள்ளோம். நெல்லை கலெக்டர் அலுவலகத்தை திங்கள்கிழமை காலையில் முற்றுகையிட உள்ளோம். மதுரையிலும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.சென்னையில் பா.ம.க.,சார்பில் போராட்டம் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் போராட்டத்தை துவக்குகின்றனர் என்றார். மாணவர்கள் படிப்பு பாதிப்பு: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, பெருமணல், உவரி, கூட்டப்பனை, கூடுதாழை என 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் மக்கள் இடிந்தரை போராட்டத்திற்குவந்துவிடுகின்றனர். இவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பள்ளி மாணவ, மாணவிகளும் சுமார் 500 பேர் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளும் உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலுபவர்களும் உள்ளனர். இவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் அணுஉலைக்கு எதிராக மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் அனேக கிராமங்களில் மீனவர்களின் குடும்பங்கள் பட்டினியை நிலையை எட்டியுள்ளனர். உவரியில் மீனவர்களுக்காக கஞ்சிதொட்டி திறக்கப்பட்டது. இதே போல மற்ற கிராமங்களிலும் கஞ்சிதொட்டி திறக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us