முதல்வருடன் 45 நிமிடம் வானில் வட்டமிட்ட விமானம்
முதல்வருடன் 45 நிமிடம் வானில் வட்டமிட்ட விமானம்
முதல்வருடன் 45 நிமிடம் வானில் வட்டமிட்ட விமானம்
ADDED : செப் 16, 2011 12:12 AM

ஐதராபாத்: மோசமான வானிலை காரணமாக, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல் 45 நிமிடம் வானில் வட்டமடித்தது.
பின்னர், ராஜமுந்திரியில் உள்ள விமான நிலையத்தில், பத்திரமாகத் தரையிறங்கியது. ஆந்திரா மேற்கு கோதாவரி மாவட்டம், பூலா பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்காக, மாநில அரசு சார்பில் கூட்டுறவு வங்கி நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று காலை புறப்பட்டார். காலை 10.30 மணியளவில், ராஜமுந்திரியில் உள்ள மதுராபுரி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க வேண்டும். ஆனால், ராஜமுந்திரியில் மோசமான வானிலை நிலவியதால், முதல்வர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 45 நிமிடத்திற்கு மேலாக வானில் வட்டமடித்தபடி இருந்தது. பின்னர், வானிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, காலை 11.15 மணியளவில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ''மழையும் பெய்யவில்லை அல்லது பலமான காற்றும் வீசவில்லை. வானில் மேக மூட்டமும் இல்லை. ஆனாலும், சூரிய வெளிச்சம் இல்லாத நிலை காணப்பட்டதால், விமானம் தரையிறங்க அதிகாரிகள் உடனடியாக அனுமதி தரவில்லை'' என, ஆந்திர மாநில பதிவுத் துறை அமைச்சர் நரசிம்மம் தெரிவித்தார்.


