கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு அமைச்சர் தகவல்
கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு அமைச்சர் தகவல்
கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு அமைச்சர் தகவல்
ADDED : ஜூலை 31, 2011 11:09 PM

மேட்டுப்பாளையம்:''தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு துறை மூலம் இயங்கும்
நிறுவனங்களை ஆய்வு செய்து, முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்படும்,'' என,
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மேட்டுப்பாளையத்தில்
உள்ள நீலகிரி கூட்டுறவு உருளைக்கிழங்கு விற்பனை மையத்தை, கூட்டுறவுத் துறை
அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார். அங்கு, கிழங்கு ஏலம் நடைபெறும்
விதம் குறித்தும், எங்கெல்லாம் செல்கிறது என்று அதிகாரிகளிடம்
கேட்டறிந்தார்.
பின்பு, உரக்கலவை மையத்தை பார்வையிட்டு, மூன்று வகையான உரங்கள் எந்த
விகிதத்தில் கலக்கப்படுகின்றன என்பதை கேட்டார். அதன் பின், வேளாண்மை
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் நடைபெறும்
வாழைத்தார் ஏல மையத்தில் ஆய்வு செய்தார்.அமைச்சர் செல்லூர் ராஜு,
நிருபர்களிடம் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும்
மையங்களை பார்வையிடும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
கோவை,
திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும்
நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறேன்.மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி
கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இருந்து, வெளி மாநிலம் மற்றும் வெளி
நாடுகளுக்கும் உருளைக்கிழங்கு தரம் பிரித்து அனுப்பப்படுகிறது.கூட்டுறவுத்
துறை மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்கள், தரமான
முறையில் உள்ளதா, இலவச அரிசி முறையாக வழங்கப்படுகிறதா என அதிகாரிகளிடம்
கேட்கப்பட்டது. கூட்டுறவுத் துறை சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களை ஆய்வு
செய்து, முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர்
செல்லூர் ராஜு கூறினார்.ஆய்வில், அமைச்சருடன் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,
சின்னராஜ், மண்டல இணை பதிவாளர் தயாளன், உதகை சரக துணை பதிவாளர் ஜீவா, கோவை
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெள்ளியங்கிரி உட்பட, பலர் உடன்
வந்தனர்.மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தக சபை மற்றும் கிழங்கு மண்டி
தொழிலாளர்கள், அமைச்சரிடம் இந்த மண்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற
வேண்டாமென்று கோரிக்கை விடுத்தனர்.