அதிக நிதிச்சுமையின்றி பள்ளியில் காலை உணவும் வழங்கலாம் :? தலைமை ஆசிரியர்கள் யோசனை
அதிக நிதிச்சுமையின்றி பள்ளியில் காலை உணவும் வழங்கலாம் :? தலைமை ஆசிரியர்கள் யோசனை
அதிக நிதிச்சுமையின்றி பள்ளியில் காலை உணவும் வழங்கலாம் :? தலைமை ஆசிரியர்கள் யோசனை
மதுரை : ''பள்ளிகளில் காலை உணவையும் வழங்கினால் கற்றல் திறன் மேம்படும்,'' என தலைமை ஆசிரியர்கள் நிதிச்சுமையற்ற புதிய யோசனையை வழங்கி உள்ளனர்.
மாணவர்கள் மேம்பாட்டுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசு, காலை உணவையும் அதிக செலவின்றி வழங்கலாம். இதன்மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் அவசர, அவசரமாக காலை உணவை உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் மதியம் வரை தாக்குப் பிடிக்க முடியாமல் களைப்படைகின்றனர். படிப்பிலும் நாட்டம் செல்வதில்லை. குடும்பங்களில் காலை உணவு தயாராவது தாமதமானால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதும் தாமதமாகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும்.
காலை உணவு திட்டத்தை செயல்படுத்த அதிக நிதியும் அரசுக்கு தேவையில்லை. தற்போது வழங்கும் முட்டையை சைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் பெறுவதில்லை. அசைவ மாணவர்களும் 5 நாள் தொடர்ந்து சாப்பிட விரும்புவதில்லை. முட்டையை நிறுத்தியோ அல்லது வழங்கும் நாட்களை குறைத்தாலோ முட்டைக்கான செலவு மிச்சமாகும். அதைக் கொண்டு காலை உணவை வழங்கலாம். ஒரு முட்டை ரூ. 2.25 என்ற கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே சமயம் உணவுக்காக செலவிடுவதோ அரிசி 150 கிராம், விறகு, மசாலா, காய்கறிக்கு 80 காசுகள், 3 கிராம் எண்ணெய், 15 கிராம் பருப்பு என்ற அளவில்தான். எனவே ரூ. 2.25க்கு பொங்கல் அல்லது இட்லி வழங்க முடியும். இதனால் அரசுக்கு அதிக நிதிச்சுமை வராது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி, மதுரை செயலாளர் பாஸ்கரன் கூறியபோது, ''காலை உணவு சாப்பிடாமல் வரும் கிராமப்புற மாணவர்கள் மயங்கி விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே காலை உணவு வழங்கினால் வீட்டில் சாப்பிடாமல் வரும் மாணவர்களும் ஆர்வத்துடன் கல்வி கற்பர். சத்துணவு ஊழியர்களையும் அவர்கள் கோரிக்கைப்படி முழுநேர ஊழியராக பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றனர்.