Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பணியின்போது மதுரை போக்குவரத்து போலீசார் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என புலம்பல்

பணியின்போது மதுரை போக்குவரத்து போலீசார் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என புலம்பல்

பணியின்போது மதுரை போக்குவரத்து போலீசார் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என புலம்பல்

பணியின்போது மதுரை போக்குவரத்து போலீசார் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என புலம்பல்

ADDED : ஆக 01, 2011 01:57 AM


Google News
மதுரை:மதுரையில் போக்குவரத்து போலீசார் உயிருக்கு பயந்து பணியாற்ற வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலும், அதிவேகத்தாலும் தொடர்ந்து இவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேர பணியின்போது, அடையாளப்படுத்தும் மிளிரும் தன்மையுடைய உடை கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை கமிஷனர் கண்ணப்பன் பிறப்பிக்க வேண்டும். நேற்று முன் தினம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்குவழிச்சாலையில் இனாம்ரெட்டியப்பட்டியில் வேன் ஒன்று கவிழ்ந்தது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய எஸ்.ஐ., ராமர், ஏட்டு செல்வமணி(40) மீது வேன் மோதியதில் ஏட்டு பலியானார். இதேபோன்று சம்பவம், சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் எஸ்.ஐ., ஒருவர் இறந்தார். பணியின்போது எந்நேரமும் வி(ஆ)பத்து ஏற்படலாம் என்ற அச்சத்துடனே நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளதாக மதுரை போலீசார் புலம்புகின்றனர். இரவில் ஒளிரும் கவசங்களை அணிவதில்லை.

விபத்து பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும்போது, முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கை பலகைகள், 'சிக்னல்கள்' வைப்பதில்லை. போலீசார் விபத்தில் சிக்குகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது : 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், வேலைக்கு அவசரமாக செல்லும்போது வாகன சோதனை என்று போலீசார் நிறுத்தி, சில நிமிடங்கள் காத்திருக்க வைக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளில் சிலர், போலீசாரை தாக்குகின்றனர். சமீபத்தில் யானைக்கல்லில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,யிடம் பெண் டாக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'ரோட்டில் நிற்கும்போது, நம்மை பார்த்து வாகன ஓட்டிகள் ஒதுங்கி போய் விடுவார்கள்' என்று போலீசார் நினைக்கின்றனர். இது அவர்களின் அறியாமை. சிவப்பு விளக்கை காண்பித்து வாகனத்தை நிறுத்தாமல், கைகளால் சைகை காட்டுகின்றனர். இதை சிக்னலில் வாகன ஓட்டிகள் கவனிக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு ஒளிரும் தன்மை உடைய உடை கவசங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதை கட்டாயம் அணியவேண்டும் என கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us