இலவச ஆடு, மாடுகளை "பார்த்து பார்த்து' வாங்கிய பெண் பயனாளிகள்:வரும் 15ல் திட்டம் துவக்கம்
இலவச ஆடு, மாடுகளை "பார்த்து பார்த்து' வாங்கிய பெண் பயனாளிகள்:வரும் 15ல் திட்டம் துவக்கம்
இலவச ஆடு, மாடுகளை "பார்த்து பார்த்து' வாங்கிய பெண் பயனாளிகள்:வரும் 15ல் திட்டம் துவக்கம்
சென்னை:இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகள், கால்நடைத்துறை அதிகாரிகளுடன் வெளிமாநிலத்திற்கு சென்று, கலப்பின ஜெர்சி பசுக்களை, 'பார்த்து பார்த்து' தேர்வு செய்துள்ளனர்.
உள்ளூரில் உள்ள பசுக்களை வாங்கி, உள்ளூரில் உள்ள பயனாளிகளுக்கு கொடுத்தால், தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பில்லை. அதனால், வெளி மாநிலத்தில் உள்ள கலப்பின பசுக்களை வாங்கவும், ஆடுகளை உள்ளூரிலேயே வாங்கவும் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.இந்தாண்டு (2011-12) ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 3 ஆடுகளும், 30 ஆயிரம் ரூபாயில் ஒரு கலப்பின பசுவும் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகள், கால்நடைத்துறை அதிகாரிகளுடன் வெளி மாநிலத்தில் உள்ள சந்தைக்கு சென்று, அவர்களது மனதிற்கு பிடித்த கலப்பின பசுக்களை, 'பார்த்து பார்த்து' வாங்கியுள்ளனர்.முதல் நாள் சந்தையில் மனதிற்கு பிடித்த பசு அமையாததால், சில நாட்கள் வெளிமாநிலத்தில் தங்கி, பசுக்களை வாங்கியுள்ளனர். பசுக்கள் வாங்கப்பட்ட இடத்தில் பயனாளி, கால்நடைத்துறை அதிகாரிகள் இருப்பது போன்ற போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவுடன், பயனாளியின் கிராமத்தில் பசுவுடன் பயனாளி மற்றும் கால்நடைத்துறை அதிகாரி இருப்பது போன்ற போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. பயனாளியிடம், 'அரசு கொடுத்த இலவச பசுவை விற்க மாட்டேன்' என, பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.கறவை மாடு வழங்கப்படும் கிராமத்தில், புதிதாக அரசு கூட்டுறவு பால் சங்கங்கள், பால் சேகரிப்பு மற்றும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகளை கொண்டு, 4 ஆயிரம் பால் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
இது குறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில், 8 ஆயிரத்து 400 அரசு கூட்டுறவு பால் சங்கங்கள் உள்ளன. தமிழகத்தில், வரும் 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் இலவச கறவை மாடுகள் பயனாளிகளுக்கு படிப்படியாக கொடுக்கப்பட உள்ளன.அதனால், பால் உற்பத்தி பல மடங்கு பெருகி, இரண்டாம் வெண்மை புரட்சியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. சரிவர பால் கொள்முதல் இல்லாததால் முடக்கப்பட்ட ஆயிரத்து 500 அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.இந்தாண்டு முதற்கட்டமாக வழங்கப்படும் இலவச கறவை மாடுகளால், தமிழகத்தில் 240 அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் பால் உற்பத்தியான 158 லட்சம் லிட்டரில், 20 லட்சம் லிட்டரை மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது.
தற்போது, ஆவின் 24 லட்சம் லிட்டரை தினமும் கொள்முதல் செய்கிறது. இதை 30 லட்சத்தில் இருந்து 60 லட்சம் வரை படிப்படியாக கொண்டு செல்ல, நடமாடும் கால்நடை மருத்துவமனைகள், வாரத்திற்கு ஒரு முறை இலவச மாடுகளை, அரசு கால்நடை டாக்டர்கள் பரிசோதிப்பது, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை அதிகரிப்பது போன்ற பல திட்டங்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து செய்து வருகிறோம். வரும் 15ல், இலவச ஆடு, மாடு திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்.முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், தகுதியுடைய பயனாளிகள் சேர்க்காமல் விடப்பட்டிருந்தால், அடுத்த கட்ட தேர்வில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.என்.செந்தில்